திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் 30 கோடியில் திருப்பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயிலில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவர் அம்மனை தரிசனம் செய்து, கோயில் வளாகம், பக்தர்கள் தங்கும் விடுதி, திருமண மண்டபம் மற்றும் சன்னதி தெருவில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினார். அப்போது, கோயிலை சுற்றிலும் அதிகளவு குப்பை குவிந்திருப்பதாக கோயில் இணை ஆணையரை கண்டித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:  கடந்த 7 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறோம். திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு திருப்பணிகள் நடைபெறவில்லை.  இக்கோயிலில் முடி திருத்த கூடம் நவீனப்படுத்தப்பட உள்ளது. கூடுதலாக அன்னதான கூடம், கோசாலை அமைக்கப்பட உள்ளது. திருமண மண்டபம் சீரமைக்கப்படும். கோயிலை சுற்றிலும் குவிந்துள்ள குப்பையை அகற்ற கூறியுள்ளோம். இங்கு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இக்கோயிலில் உபயதாரர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 30 கோடியில் திருப்பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இப்பணிகளுக்கு வரும் ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படுகிறது. திருப்பணிகளுக்கு உபயதாரர்கள் நிதி வரும் என நம்புகிறோம். இல்லையெனில், தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி, அப்பணிகள் குறித்த காலத்தில் நடைபெறும். புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.  இந்த ஆய்வின்போது அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் உள்பட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: