குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முழு ராணுவ மரியாதையுடன் கேப்டன் வருண் உடல் தகனம்

போபால்: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் போபாலில் தகனம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த 8ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அவர் கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் நேற்று முன்தினம் எலங்கா விமானப்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் அவரது சொந்த ஊரான போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார். பிறகு, பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், சம்பிரதாய பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முழு ராணுவ மரியாதையுடன் வருண் சிங் உடலுக்கு அவரது மனைவி, மகன், கடற்படையில் பணியாற்றும் வருண் சிங்கின் சகோதரர் ஆகியோர் தீ மூட்டினர்.

Related Stories: