×

ஒன்றிய அரசு போதியளவு கோமாரி நோய் தடுப்பூசியை தரவில்லை; அண்ணாமலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அறிக்கை

சென்னை: கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி மருந்து இருப்பு குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் ஊடகங்களில் தெரிவித்த கருத்துகளுக்கு மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களின் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். கால்நடைகளைத் தாக்கி, விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கால் மற்றும் வாய் கோமாரி நோயை கட்டுப்படுத்தும் கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆறு மாதம் இடைவெளியில் அதாவது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தகுதியுள்ள மாட்டினங்களுக்கு தடுப்பூசி பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 90.30 இலட்சம் தடுப்பூசி மருந்துகள் முழுவதுமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு, தகுதியுள்ள 87.03 இலட்சம் மாட்டினங்களுக்கு முதல் சுற்று தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், கடந்த பிப்ரவரி 2020க்குப் பின்பு, ஒன்றிய அரசால் வழங்கப்பட வேண்டிய அடுத்த தவணையான செப்டம்பர் 2020, பிப்ரவரி 2021 மற்றும் செப்டம்பர் 2021 மாதங்களுக்கான தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கோமாரி நோய்த் தொற்று ஏற்பட்டு விவசாயிகளின்  பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது  எனும் அடிப்படையில்,  கையிருப்பில் இருந்த கோமாரி நோய் தடுப்பு மருந்துகள் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும்,  கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையோர தமிழக மாவட்டங்களான ஈரோடு, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், ஆகிய மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களில் உள்ள மாட்டினங்களையும் சேர்த்து சுமார் 2.69 இலட்சம் தடுப்பூசிகள் செப்டம்பர் 2021-ல் போடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் இரண்டாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணிக்கு தேவைப்படும் 90.00 இலட்சம் தடுப்பூசிகள்  வழங்கிட ஒன்றிய அரசிடம் கால்நடை பராமரிப்பு (ம) மருத்துவப்பணிகள், இயக்குநர் அலுவலக கடித ந.க.எண்.20244/ஜேஜே1/2020, நாள்.25.06.2021, 05.08.2021, 20.09.2021, 18.10.2021, 03.11.2021 மற்றும் 08.12.2021-இன் வழி கோரப்பட்டது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 18 மாத இடைவெளிக்குப் பின்னர் IIL/2021-22/AH/IN1920A139/164, நாள்.28.09.2021, IIL/2021-22/AH/IN1920A139/192, நாள்.25.10.2021-இன் வழி ஒன்றிய அரசிடமிருந்து 28.85 இலட்சம் அளவில் கோமாரி நோய்  தடுப்பூசி பெறப்பட்டது. இதன் மூலம், ஈரோடு, தஞ்சாவூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நோய்க் கிளர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சாவூர், திருவண்ணமாலை ஆகிய மாவட்டங்களுக்கு உடனடி தேவைக்கு தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு நோய்ப்பரவல் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நோயின் தீவிரத் தன்மையை உணர்ந்த அரசு ஒன்றிய அரசுக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம்- மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் கடித எண்.8778/காப3-2/2021, நாள்.14.07.2021, 03.09.2021, 02.11.2021 மற்றும் 26.11.2021ன் வழி மீதமுள்ள தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்ப கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், தமிழகத்தின் தலைமைச்செயலாளர் அவர்களும் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை செயலருக்கு நே.மு.கடித எண்.8778/காப3-2/2021-6, நாள்.25.11.2021ன் வழி கடிதம் எழுதி, மீதமுள்ள 61.15 இலட்சம் கோமாரி நோய் தடுப்பூசி மருந்தை உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஒன்றிய அரசு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி அன்று  IIL/2021-22/AH/IN1920A139/ 229, நாள்.07.12.2021-இன் வழி 20.89 இலட்சம் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தேவைப்படும் இதர மாவட்டங்களின்  உடனடி தேவைக்கென தடுப்பூசி மருந்துகள் பிரித்து வழங்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சுற்று தடுப்பூசிப்பணிக்கு தமிழகத்திற்கு மேலும் 40.26 இலட்சம் தடுப்பூசி மருந்துகள் ஒன்றிய அரசால் வழங்கப்பட வேண்டியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றபின் தமிழ்நாட்டில் உள்ள கால்நடைகளின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோமாரி நோய் தடுப்பூசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவளத்துறை  இணை அமைச்சரின் டெல்லி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நான் கேட்டுக்கொண்டேன்.

மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் ஒன்றிய அரசின் தொடர்புடைய அமைச்சகத்தின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றார்கள். கோமாரி நோய் கிளர்ச்சி குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது தடுப்பூசிகள் பற்றாக்குறை பற்றி கூற வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது.  கால்நடை வளர்க்கும் ஏழை, எளிய விவசாய பெருமக்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்ட கருத்துக்களை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் உண்மை நிலை அறியாமல் அரசியல் பேசி வருவது நகைப்பாக உள்ளது. இவ்வாறு உண்மைக்கு புறம்பாக பேசுவதை தவிர்த்து தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தலைவர் தமிழகத்திற்கு வரவேண்டிய தடுப்பு மருந்துகளை விடுபாடின்றி உரிய நேரத்தில் கிடைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு தமிழக கால்நடை விவசாயிகளின் நலன்மேல் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.


Tags : United States government ,Minister ,Anita Radhakrishnan ,Annamalai , The United States government has not provided adequate vaccination against syphilis; Minister Anita Radhakrishnan's reply to Annamalai
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...