×

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இல்லக் கட்டடத்தை நேற்று திறந்து வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு.!

சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இல்லக் கட்டடத்தை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் அன்று திறந்து வைத்தார்கள். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அபிராமி சிதம்பரம் சமுதாயக் கூடத்தில் அன்று மாலை நடைபெற்ற, தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் இருபெரும் விழாவில், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இல்லக் கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.

மேலும், மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க வலைத்தளத்தையும், இணையவழியில் சங்கத்திற்கு நன்கொடை வழங்கும் வசதியையும் முதன் முதலாக துவக்கி வைத்தார்கள். அத்துடன், ரூ.5001/-ஐ முதல் நன்கொடையாக  மாண்புமிகு பொதுப்பணிகள் துறை அமைச்சர் அவர்கள்  வழங்கி விழாவை சிறப்பித்தார்கள். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் பொறிஞர். டி.எஸ்.கே. முதலியார், பொறிஞர்.கே.இராமசாமி ரெட்டி, பொறிஞர். இ.சி.சந்திரசேகரன் போன்ற பொறியியல் வல்லுநர்களால், 1956 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க வளாகத்தை சில மாதங்களுக்கு முன்னர் பார்வையிட்ட மாண்புமிகு பொதுப்பணிகள் துறை அமைச்சர் அவர்கள், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இல்லம் பழைய நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி அதனை புதுப்பிக்க ஆலோசனை வழங்கினார்கள்.  மாண்புமிகு அமைச்சரின் ஆலோசனைகளை ஏற்று மூன்றே மாதங்களில் சங்க கட்டடத்தை புதுப்பித்தனர். நெடுஞ்சாலைத்துறை சங்க இல்லத்தை மாண்புமிகு பொதுப்பணிகள் துறை அமைச்சர் அவர்கள் 16.12.2021 அன்று மாலையில் திறந்து வைத்து, சங்க கட்டிடத்தில் அமைந்துள்ள  கூட்ட அரங்கினை பார்வையிட்டார்கள்.

இவ்விழாவில், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பொறிஞர்.சு.கண்ணன், பொதுச் செயலாளர் ஆர்.தீபக் பொருளாளர் இ.தேன்மொழி மற்றும் அனைத்து நிர்வாகிகளும், தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகளும், அகில இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகளும், பணிநிறைவுப் பெற்ற மூத்தப் பொறியாளர்களும் மற்றும்  அனைத்து பொறியாளர்களும் பங்கு கொண்டனர். நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகளை இவ்விழாவில் முன்வைக்கப்பட்டது.

1) மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பொறியாளர்களுக்கு திருத்திய 6வது ஊதியக்குழு ஊதியத்தை 2010ம் ஆண்டு வழங்கினார். பின்னர் அமைந்த அரசு, பொறியாளர்களின் ஊதியத்தை குறைத்து விட்டது. இன்றளவும் குறைந்த ஊதியத்தையே பொறியாளர்கள் அனைவரும் பெற்று வருகின்றனர். மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழங்கிய ஊதியத்தை மீண்டும் வழங்கி அதன் அடிப்படையில் 7வது ஊதியக்குழு உயர்வுகளை பொறியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

2) நெடுஞ்சாலைத்துறையில் பணிச்சுமையினை குறைப்பதற்காகவும், பணிகள் தரமாக நடைபெறுவதற்கும், பொதுப்பணித்துறையில் உள்ளது போல், மண்டல வாரியாக தலைமைப் பொறியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

3) நெடுஞ்சாலைத்துறையில், முதன்மை இயக்குநர் பதவியின் பெயரை முதன்மை தலைமைப் பொறியாளர் (Engineer in Chief) என்று பெயர் மாற்றம் செய்தல் வேண்டும்.

4) தொழில்நுட்பம் தொடர்பான கருத்துருக்களை பரிசீலித்து அரசுக்கு ஆலோசனை வழங்கிட  நெடுஞ்சாலைத்துறைக்கென தலைமைச் செயலகத்தில் தலைமைப் பொறியாளர் நிலையில் சிறப்பு செயலாளர் (Special Secretary) பதவி ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும்.

5) தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் (TNRIDC) செயல் இயக்குநராக பணியில் உள்ள தலைமைப் பொறியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

6) நெடுஞ்சாலைத்துறையில், திட்டப்பணிகள் காலதாமமின்றி விரைவில் நிறைவேற, திட்டங்களை செயல்படுத்துகின்ற பொறியாளர்களுக்கும், அதற்கு உதவுகிற பணியாளர்களுக்கும், 10% விழுக்காடு ஊதியத்தை கூடுதல்படி என்கிற அடிப்படையில் வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் மாண்புமிகு பொதுப்பணிகள் துறை அமைச்சர் அவர்கள் கனிவுடன் கேட்டறிந்து,  இக்கோரிக்கைள் அனைத்தையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தார்கள்.


Tags : Tamil Nadu Highway Engineer Home Building ,Minister ,A. V.V Velu , Minister EV Velu inaugurated the building of the Tamil Nadu Highway Engineer's House yesterday.
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி