மக்களை தேடி மக்களின் அரசு திட்டத்தின் கீழ் குன்னூரில் 292 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-வனத்துறை அமைச்சர் வழங்கினார்

ஊட்டி : குன்னூரில் 292 பயனாளிகளுக்கு ரூ.22.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார். மக்களை தேடி மக்களின் அரசு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குன்னூரில் நடந்தது. கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமை வகித்து 292 பயனாளிகளுக்கு ரூ.22.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் நோக்கில் மக்களை தேடி மக்களின் அரசு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சி பகுதிகளில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் சுமார் 20 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குன்னூர் வட்டத்தில் முதற்கட்டமாக இரட்டை பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சமும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 238 பேருக்கு ரூ.2.38 லட்சமும், தோட்டக்கலை துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 356ம், குடிமை பொருள் வழங்கல் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரமும், 14 பேருக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.7 லட்சமும் என மொத்தம் 292 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 81 ஆயிரத்து 356 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில், குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஷ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் மற்றும் குன்னூர் திமுக நகர செயலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Related Stories: