×

கொரோனா அதிகமுள்ள நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை பெருங்குடியில் அன்பின் அக்ஷயபாத்திரம் அறக்கட்டளை துவக்க விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு  துவக்கி வைத்தார். பின்னர் அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளியில் பயிலும் 25 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணம், 50 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை தலா ரூ.2000, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட கொரோனாவால் பெற்றோரை இழந்த 6 குடும்பங்களுக்கு உதவி தொகை ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும், கொரோனாவால் தந்தையை இழந்த மாணவி ஒருவருக்கு கல்வி செலவை, அன்பின் அக்ஷயபாத்திரம் அறக்கட்டளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளதை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் இதுவரை 92.91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 52.05 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது, நைஜீரியாவில் இருந்து வந்திருந்த ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 6 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது. கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருவோர் பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு முகாமில் கட்டாயமாக 7 நாட்கள் தங்க வைக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Ma Subramaniam , Corona, Air Passengers, Inspection, Minister Subramanian
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...