×

லஞ்ச ஒழிப்பு சோதனையில் திடுக் தகவல் மாஜி அமைச்சர் தங்கமணி வெளிநாடுகளில் முதலீடு?..தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தும் அதிகாரிகள்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக முக்கிய துறைகளை கவனித்து வந்த அமைச்சர்கள் பல முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் மீது விசாரணை நடத்தும்படி அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிக முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி, ஐஜி பவானீஸ்வரி, டிஐஜி லட்சுமி, எஸ்பி மயில்வாகனன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையைத் தொடர்ந்து ஏற்கனவே 4 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களது வீடுகள், உறவினர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது 5வதாக அதிமுக மாஜி அமைச்சரான தங்கமணி வீடு மற்றும் உறவினர்கள், பினாமிகள், நண்பர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பல இடங்களில் நள்ளிரவு வரை சோதனை தொடர்ந்தது.
இந்த சோதனையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய நண்பர் வேலுச்சாமி. சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது அக்கா வசந்தி(55). இவரது கணவர் சுப்பிரமணியன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். வசந்தி கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள பாலதுறை கவுண்டன்புதூரில் வசித்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன், மகள் திலகவதி. இருவரும் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகளும், வசந்தியின் மகள் திலகவதியும் ஒரே கல்லூரியில் படித்ததாகவும், அவர்கள் நெருங்கிய தோழிகள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதேபோல் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. வசந்தியின் வீட்டில் சோதனை நடத்துவதற்காக நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி நடராஜன் தலைமையில் போலீசார் வந்தனர். அப்போது வசந்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததால் புகளூர் மண்டல துணை தாசில்தார் அன்பழகன் மற்றும் வருவாய் துறையினர் வரவழைக்கப்பட்டு அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டுக்குள் சென்றதும் வீட்டின் உள் கதவை தாழிட்டுக்கொண்டனர்.

வேலுச்சாமி சிங்கப்பூரில் தங்கமணிக்காக சொத்துக்களை வாங்கி குவித்தாரா? முதலீடு செய்துள்ளாரா? என்பது குறித்தும், இதற்கான ஆவணங்கள் வேலுச்சாமியின் அக்கா வசந்தியின் வீட்டில் மறைத்து வைத்து இருக்கலாம் என்ற அடிப்படையிலும் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு துவங்கிய சோதனை மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த சோதனையில் சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வேலுசாமி மற்றும் மணிகண்டன் ஆகியோர் சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வசந்தியின் வங்கி கணக்குகளை ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெளிநாடுகளில் தங்கமணி முதலீடு செய்திருப்பதற்கான சில தகவல்கள் கிடைத்துள்ளன. கிரிப்டோ கரன்சி போல மேலும் சொத்துக்கள் வாங்கியிருக்கலாம், பணத்தையும் முதலீடு செய்திருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 69 இடங்களில் நடந்த சோதனையை ஒருங்கிணைத்து, தகவல் திரட்டும் பணிகள் மட்டும் நேற்று நடந்தது. ஓரிரு நாளில் வெளிநாடு முதலீடு குறித்த சில விசாரணையை தொடங்க உள்ளோம்.

இந்த விசாரணையில் கண்டிப்பாக முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், வட மாநிலங்களில் உள்ள சில நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறோம். அவர்களது கம்பெனியிலும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாசாலையில் உள்ள ஒரு மின்வாரிய கம்பெனி திடீரென மலேசியா தொழில் அதிபருக்கு கையமாறியுள்ளது. இது குறித்தும் விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த விசாரணையில் சிலர் சிக்குவார்கள். இவ்வாறு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வட மாநிலங்களில் உள்ள சில நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறோம். அவர்களது கம்பெனியிலும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags : Former ,Minister ,Thangamani , Anti-corruption probe, former minister Thangamani, investigation, officials
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...