1842 கி.மீ., சாலைகளில் 1518 கி.மீ., தற்காலிகமாக சீரமைப்பு சேதமடைந்த மீதமுள்ள 324 கி.மீ., சாலை சீரமைப்பை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்: பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட  சேதங்கள் குறித்தும், அவற்றை சீரமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை  குறித்தும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில்  அமைச்சர் எ.வ.வேலு, சாலைகளில் ஏற்பட்ட 52 உடைப்புகளில் இதுவரை 49 உடைப்புகள் சரி  செய்யப்பட்டு, சீரான போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.  மீதமுள்ள 3  உடைப்புகள் தண்ணீர் அதிகமாக செல்வதால், வடிந்தவுடன் இன்னும் 15 நாட்களில்  சீர்செய்ய வேண்டும்.

தமிழகத்தில் வெள்ளத்தினால் 32 தரைப்பாலங்கள்  பாதிக்கப்பட்டன.  இவற்றுள் 20 தரைப்பாலங்கள்  சீரமைக்கப்பட்டு, தங்கு தடையற்ற போக்குவரத்து நடந்து வருகிறது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 159 இடங்களில்  நிலச்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இவற்றில் 155  இடங்களில் நிலச்சரிவுகளை அகற்றி, தற்காலிகமாக மணல் மூட்டைகளை அமைத்து  போக்குவரத்திற்கு ஏற்ற முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் வெள்ளத்தால்  சேதமடைந்த 1842 கி.மீட்டர் நீள சாலைகளில் 1518 கி.மீட்டர் நீள சாலைகள்  நீர்கோப்பு கப்பிகள் (WMM Patches) கொண்டு உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 324 கி.மீட்டர் நீள சாலைகளை டிசம்பர் மாத இறுதிக்குள் சீரமைக்க  வேண்டும்.  இதற்காக ஒதுக்கிய  ரூ.17 கோடியில் பணிகளை மேற்கொண்டு மீதமுள்ள  அனைத்து சேதங்களையும் சீர் செய்யுமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் பணியை ஜன.31க்குள் முடிக்க உத்தரவு

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளில் சில மாவட்டங்களில் நில எடுப்பு பணிகளில் சுணக்கம் இருப்பதை கவனத்திற்கு கொண்டுவந்தனர். சம்பந்தப்பட்ட இடங்களில் நில எடுப்பை விரைந்து மேற்கொண்டு அனைத்து பணிகளையும், ஜன.31ம் தேதிக்குள் முடித்திட  மாவட்ட ஆட்சியர்களுக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: