×

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு சட்டம் ரத்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி 26ம் தேதி தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த சட்டத்தை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, பாமக உட்பட 13 தரப்பினர் சார்பில் மேல்முறையீட்டு மனுக்களும், மேலும் 13 தரப்புகள் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய். பி.வி.நாகரத்னா அமர்வில் நேற்று இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன், வழக்கறிஞர் குமணன் ஆகியோர் தங்கள் வாதத்தில் கூறியதாவது: வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு மீறப்படவில்லை. ஏற்கனவே, மிகவும் பிறப்பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டில்தான் இது உள்ஒதுக்கீடாக  வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு மட்டுமல்ல; அதில் உள்ள 7 பிரிவினருக்கானது.

ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், அருந்ததியினருக்கு இதுபோல் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநில அரசு இதுபோன்று சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983ல் நடத்திய கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையின் அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதி கிடைக்கும் வகையில் இது தரப்பட்டுள்ளது. இவை எதையும்  ஆய்வு செய்யாமல் உயர் நீதிமன்ற கிளை இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது. அதில் எந்த முகாந்திரமும் கிடையாது என்பதால், அதன் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து, 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் நாகமுத்து, ராகுல் கவுஷிக், சஞ்சய் விசன், வழக்கறிஞர்கள் ராஜராஜன், வாசுகி ராஜராஜன் ஆகியோர், ‘தமிழகத்தில் மிகவும். பிற்படுத்தப்பட்ட பிரிவில் 160 பிரிவினர் இருக்கும்போது, அதில் ஒரு பிரிவினருக்கு மட்டும் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சமத்துவத்துக்கு எதிரானது. மேலும், எந்த தரவுகளும் இல்லாமலே வன்னியர்களுக்கு  இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு பிறகு 75 ஆயிரம் மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அரசு பணி நியமனமும் நடந்துள்ளது.

இதுபோன்ற சூழலில் ஏதேனும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் அவர்களும் பாதிப்பார்கள். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கூடாது,’ என வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவில், ‘இந்த வழக்கில் தற்போது  எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. அவசரத்தில் உத்தரவு பிறப்பித்தால், அது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வழக்கில் பல்வேறு  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் நேர விரயத்தை தவிர்க்க, இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்களின் அனைத்து வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக அடுத்தாண்டு பிப்ரவரி 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், பிப்ரவரி 15, 16 தேதிகளில் வழக்கு விரிவாக விசாரிக்கப்படும். அப்போது, அனைத்து தரப்பும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும். இந்த வழக்கு மிகவும் முக்கியமானது என்பதால் யாரும் விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரக் கூடாது. அதை நீதிமன்றமும் ஏற்காது. தமிழக அரசு உட்பட பலர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிடுகிறோம்,’ என கூறி, வழக்கை வரும் பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மாணவர் சேர்க்கை, நியமனத்துக்கு தடை
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், தமிழகத்தில் மாணவர் சேர்க்கை, அரசுப் பணி நியமனம் ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது. ஏற்கனவே செய்யப்பட்ட பணி நியமனங்கள், மாணவர் சேர்க்கைகளை இந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு எந்த வகையிலும் தொந்தரவு செய்யக் கூடாது,’ என்றும் தெரிவித்தனர்.

Tags : High Court ,Vanni ,Supreme Court , Reservation, Repeal of Law, High Court, Supreme Court
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...