×

பப்ஜி கேமில் சிறப்பாக விளையாடுபவர்களின் ஐடி வாங்கி தருவதாக பள்ளி மாணவர்களை ஏமாற்றி ரூ.8 லட்சம் பணம் பறிப்பு: வணிக வரித்துறை இளநிலை உதவியாளர்,மனைவி மீது போலீஸ் வழக்கு

சென்னை: பப்ஜி கேமில் சிறப்பாக விளையாடும் நபர்களின் ஐடியை வாங்கி தருவதாக பள்ளி மாணவர்களிடம் ரூ.8 லட்சம் பணம் பறித்த வணிகவரித்துறை இளநிலை உதவியாளர் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 12ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தங்களது செல்போனில் பப்ஜி விளையாடி வந்துள்ளனர்.

இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் மெரிட்டா தம்பதியின் மகனும் விளையாடி வந்துள்ளான். பப்ஜி விளையாட்டில் சிறப்பாக விளையாடும் நபர்களின் ஐடியில் விளையாடினால் அதிகளவில் பணம் கிடைக்கும் என்று நடராஜன் மகன்களிடம் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி கூறியுள்ளனர். ராஜசேகர் வணிகவரித்துறையில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்த ஐடியை வாங்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இரண்டு மாணவர்களும் கேட்டுள்ளனர். அதற்கு பணம் கொடுத்தால் அந்த ஐடியை வாங்கி தருவதாக மாணவர்களிடம் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

அதை நம்பி நடராஜன் வீட்டு மனை வாங்க வைத்திருந்த பணத்தில் ரூ.8 லட்சத்தை எடுத்து வந்து ராஜசேகர் மற்றும் அவரது மனைவி மெரிட்டாவிடம் கொடுத்துள்ளனர். வீட்டில் நிலம் வாங்க வைத்திருந்த பணத்தில் ரூ.8 லட்சம் குறைந்துள்ளது குறித்து நடராஜன் மனைவி மற்றும் அவரது 2 மகன்களிடம் கேட்டுள்ளார்.முதலில் அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர். பிறகு 2 மகன்களையும் தனியாக அழைத்து தந்தை நடராஜன் பேசியுள்ளார். அப்போது தான் பப்ஜி விளையாட்டில் நன்றாக விளையாடும் நபர்களின் ஐடியை வாங்க பணத்தை எடுத்து நண்பனின் பெற்றோரிடம் கொடுத்ததாக கூறி உள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நடராஜன், உடனே சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பள்ளி மாணவர்களுக்கு ஆசைவார்த்தை கூறி ரூ.8 லட்சம் பணத்தை பறித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ரூ.8 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த ராஜசேகர், அவரது மனைவி மெரிட்டா மற்றும் அவர்களின் 15 வயது மகன் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Babji, ID, School Student, Money Laundering, Business Taxation, Case
× RELATED தகாத உறவு காதலியின் கணவர் கொலை அதிமுக பஞ்சாயத்து தலைவர் கைது