×

நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருந்த நிலையில் காங்கோவிலிருந்து ஆரணி வந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் அறிகுறி: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: காங்கோ நாட்டிலிருந்து ஆரணிக்கு வந்த பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் அறிகுறி இருப்பதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது டீன் தேரணிராஜன்,  மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவ நிலைய அதிகாரி மணி மற்றும் மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கோவில் இருந்து பெண் ஒருவர் விமானம் மூலம் தமிழகம் வந்துள்ளார். அவர், தனது சொந்த ஊரான ஆரணிக்கு சென்றுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் இருப்பதால் அவரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவருடன் வந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 73 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாம் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். ஆனால் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்றைக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடாத ஒரு நிலைமை உள்ளது. தடுப்பூசி போட்டு நமக்கு வந்தால் கூட நோய் பாதிப்பு தீவிரமாக இருக்காது என்று உலக சுகாதார நிறுவன மூத்த தலைவரும் கூறியுள்ளார். ஆரணியை சேர்ந்த பெண்மணி அவரது குடும்பத்தில் நடந்த ஒரு இறப்புக்கு வந்துள்ளார். அப்படி வரும் போது அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருடன் விமானத்தில் வந்தவர்கள் என அனைவருக்கும் சோதனை எடுத்துள்ளோம்.

அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். தமிழகத்தில் 40 ஆயிரத்து 24 ஆக்சிஜன் படுக்கைகளும், 8 ஆயிரத்து 679 தீவிர சிகிச்சை படுக்கைகள் உட்பட 1 லட்சத்து 11 ஆயிரத்து 252 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இவற்றை தயார்படுத்த அனைத்து மாவட்ட  கலெக்டர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் 13 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது. மேலும் அனைத்து மருந்துகளும் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் பயப்படாமல் சோதனை செய்து கொள்ள வேண்டும். முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வந்தாலும் பதற்றம் அடையாமல் உடனடியாக மருத்துவமனை சென்றால் எளிதாக குணமடையலாம். லேட்டாக வரக்கூடாது. எந்தவித பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் மாஸ்க் அணிந்து நெறிமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போது ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஆரணியை சேர்ந்த பெண்மணிக்கும் இன்னும் ஒமிக்ரான் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் அவருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, முடிவு இன்னும் வரவில்லை.

ரிஸ்க்கான நாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறீர்கள். இதுபோன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களை கண்காணிப்பதுதான் முக்கியம். ஒன்றிய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் வகுத்த பாலிசி. எனவே உங்கள் கேள்விக்கான விடைக்கு ஒன்றிய அரசு விடை தரும் என்று எதிர்பார்க்கிறோம். ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்கள் வீட்டு தனிமையில் இருப்பது கட்டாயம். பறவை காய்ச்சல் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பரிசோதனை ஆய்வகம் அனைத்து வசதிகளையும் கொண்டது. இந்நிலையில் தேசிய வைராலஜி நிறுவனம் நேற்று முன்தினம் தமிழகத்தில் இருக்கக் கூடிய ஆய்வகத்தை, அவர்களது கிளை ஆய்வகமாக கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதன் மூலம் 2 முறை பரிசோதனை செய்யப்படும் நிலை தவிர்க்க முடியும். மிக விரைவில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையை தேசிய வைராலஜி நிறுவனம் மூலம் உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags : Congo ,Nigeria ,Public ,Radhakrishnan , Secretary of Public Welfare, Nigeria, Omigron Infection, Congo
× RELATED ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்