×

கோஹ்லி கேள்விக்கு என்ன பதில்? கங்குலியிடம் கேட்கும் கவாஸ்கர்

மும்பை: இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து ‘உலக கோப்பைக்கு பிறகு விலகுவேன்’என்று செப்டம்பர் மாதம் அறிவித்தார். ஆனால் அந்த பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. கோஹ்லியின் முடிவால் பிசிசிஐ நிர்வாகிகள் ஆச்சர்யப்பட்டதாக சொன்னார்கள். அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கேட்டதாகவும் கூறினார்கள். ஆனால் செயலாளர் ஜெய்ஷா, ‘6 மாதமாக கேப்டன் பதவி குறித்து பேசி வருகிறோம்’ என்றும் சொன்னார். கோஹ்லி சொன்னபடி பதவி விலகினார். ரோகித் டி20 அணியின் கேப்டன் ஆனார். அதனால் கோஹ்லி ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டனாக தொடருவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடருக்கு, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை கோஹ்லியிடம் இருந்து பிடுங்கி ரோகித்திடம் தரப்பட்டது. இதற்கிடையில் ‘கோஹ்லியிடம் பேசிதான் எல்லா முடிவுகளையும் எடுத்தோம், அவரே விலக வாய்ப்பும் அளித்தோம்’என்று பிசிசிஐ நிர்வாகிகள் சொன்னார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென செய்தியாளர்களை சந்தித்த கோஹ்லி, ‘டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சொன்ன செப்டம்பர் முதல் தென் ஆப்ரிக்காவுக்கான அணியை அறிவிக்கும் வரை பிசிசிஐ நிர்வாகிகள் கேப்டன் பதவி குறித்து பேசவில்லை’ என்று சொன்னார். கூடவே ‘புதிய கேப்டனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடுவேன்’ என்றும் தெரிவித்தார். கோஹ்லியின் பேட்டியால்,  பிசிசிஐ நிர்வாகிகள் சொல்வதெல்லாம் பொய் என்று அம்பலமானது.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்,‘ கிரிக்கெட் வீரர்கள், வாரியம், ரசிகர்களிடையே தெளிவான தகவல் தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் கோஹ்லி விஷயத்தில் அப்படி இல்லை என்பதை அவரது பேட்டி உணர்த்துகிறது. அந்த முரண்பாட்டுக்கு காரணம் என்ன என்பதை ஒருவர்தான் பதில் சொல்ல முடியும். அவர் பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலிதான். ஊகங்கள் எதுவும் வராதபடி தெளிவான தகவல் தொடர்புகளை வைத்திருப்பது எப்போதும் நல்லது. எனவே என்ன நடந்தது என்பதை  தலைவரோ, தேர்வுக்குழுவோ விளக்க வேண்டியது அவசியம்’ என்று கூறியுள்ளார்.

* பிசிசிஐ பார்த்துக் கொள்ளும்
கோஹ்லி கருத்து குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, ‘ கோஹ்லி பேட்டி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக் கொள்ளும். உரிய நேரத்தில் பிசிசிஐ பதில் சொல்லும்’ என்று கூறியுள்ளார்.

Tags : Kohli ,Gavaskar ,Ganguly , What is the answer to the Kohli question? Gavaskar asks Ganguly
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு