கறி பிரியாணி விருந்துடன் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு: நெல்லை தொழிலதிபர் அசத்தல்

விருதுநகர்: கர்ப்பமாக உள்ள வளர்ப்பு நாய்க்கு விருதுநகரில் கோலாகலமாக வளைகாப்பு நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு கமகமக்கும் கறி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. திருநெல்வேலியை சேர்ந்தவர் அருள் அரசு. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் இரு ஆண், ஒரு பெண் நாய்கள் உள்ளன. பெண் நாய்க்கு ‘திரிஷா’ என பெயரிட்டுள்ளார். இந்த நாய் தற்போது கர்ப்பமாக உள்ளது. தொழில் விஷயமாக விருதுநகர் வந்த இடத்தில் தன்னுடன் வந்த நாய்க்கு, இங்குள்ள தனது கெஸ்ட் ஹவுசில் நேற்று வளைகாப்பு நடத்தி அசத்தினார். அருள் அரசு கூறுகையில், `என்னிடம் உள்ள நாய்களில் திரிஷா மிகவும் புத்திசாலி.

கதவை பூட்டி படுத்துவிட்டால் உள்ளே வர கதவை தட்டி திறக்க வைக்கும். சிப்பிப்பாறை கிராஸ் பிரிவைச் சேர்ந்த திரிஷா, ஆட்டை அவிழ்த்து விட்டால் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வரும். வீட்டை விட்டு நான் கிளம்பினால் காரில் உடன் வந்துவிடும். 20 நாட்களில் குட்டி போட்டு விடும் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டும் வளைகாப்பு நடத்தினேன். 5 குட்டிகள் ஈன்றது. தற்போது வளைகாப்பு நடத்தி 3 வித சாப்பாடு போட்டேன். விழாவிற்கு வந்தவர்களுக்கு கறி பிரியாணி வழங்கப்பட்டது’’ என்றார். இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

Related Stories: