×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிற்சிகள் வழங்க மானியமாக ரூ.1.70 கோடி விடுவிக்க அரசாணை வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண்காடுகள் (Agro forestry), நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் வழங்க மானியமாக ரூ.1.70 கோடி விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021 - 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் 5000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண் காடுகள் (Agro forestry), நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் ரூ.1.70 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்.

மேற்காணும் அறிவிப்பினை தொடர்ந்து 5000 ஆதிதிராவிடர் மற்றும் 2500 பழங்குடியின விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண்காடுகள் (Agro Forestry), நர்சரிசெடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கிடும் பொருட்டு ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 2200 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 800 விவசாயிகள் உள்ளிட்ட 3000 விவசாயிகளுக்கு, ஒரு விவசாயிக்கு, ரூ.2000/- வீதம் 3000 விவசாயிகளுக்கு ரூ.60 இலட்சத்தில் தோட்டக்கலை பயிற்சியும் (2 நாள் பயிற்சி), ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 200 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 800 விவசாயிகள் உள்ளிட்ட, 1000 விவசாயிகளுக்கு, ஒரு விவசாயிக்கு, ரூ.4000/- வீதம் 1000 விவசாயிகளுக்கு ரூ. 40 இலட்சத்தில் வனத்துறை பயிற்சியும் (2 நாள் பயிற்சி), மேலும் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 2600 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 900 விவசாயிகள் உள்ளிட்ட, 3500 விவசாயிகளுக்கு, ஒரு விவசாயிக்கு, ரூ.2000/- வீதம் 3500 விவசாயிகளுக்கு ரூ.70 இலட்சத்தில் வேளாண் பொறியியல் பயிற்சியும் (3 நாள் பயிற்சி) வழங்க ரூ.1.70 கோடி விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன் தெரிவித்துள்ளார்.

Tags : Adithravidar and Tribes, farmer
× RELATED தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு...