×

எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சரிடம் வழங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.!

டெல்லி: எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சரிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் இன்று புதுதில்லியில் ஒன்றிய அரசின் மாண்புமிகு மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினார்.

சந்திப்பின் போது, தமிழ்நாட்டில், எரிசக்தித்துறை சம்மந்தமாக 12 கோரிக்கைகள் ஒன்றிய அமைச்சரிடம் அளிக்கப்பட்டன. சந்திப்பின் போது, அனைத்து கோரிக்கைகள் மீதும் விரைவில் தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் திரு.ராஜேஷ் லக்கானி,இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குனர் திரு.மா.சிவலிங்கராஜன் அவர்களும் உடன் இருந்தனர்.

1. 2003 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. மேலும், தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறித்து அதாவது, 237.63 லட்சம் டன்கள் ஒன்றிய அரசினால் அனுப்பப்பட வேண்டிய நிலையில், ஆண்டு ஒன்றுக்கு 171.10 லட்சம் டன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. முழுமையாக நிலக்கரி வழங்கி உரிய அளவு மின்சாரத்தை பெறும் வகையில் (Tolling) நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

3. மேலும், ஒடிசா மாநிலத்தில், சந்திரபிலாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலிருந்து நிலக்கரி ஒதுக்கீடு பெறுவதற்கு 30.03.2016 அன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 66 மாதங்கள் கழிந்தும் அங்கு இன்னும் நிலக்கரி உற்பத்தி ஆரம்பிக்கப்படவில்லை. வனத்துறையினரின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. ஆகவே, இதற்கான ஒப்பந்த காலத்தினை நீட்டித்து தர வேண்டும்.

4. மேலும், ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்களான PFC, REC, IREDA- இல் இருந்து பெறப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் 9.50% முதல் 12.65 சதவீதமாக உள்ளது. இதனை ஒரே மாதிரியாக அனைத்து வகையான கடன்களுக்கும் 8.50% விழுக்காடாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

5. மேலும், RAPDRP - Part -B-க்கு உண்டான அனைத்து திட்டங்களும் முடிக்கப்பட்டுவிட்டன. மேற்படி திட்டத்தில் Part -A-ல் உள்ள வேலைகள் ஒப்பந்ததாரர்களால் செய்து முடிக்காத காரணத்தாலும், நீதிமன்ற வழக்கின் காரணமாகவும் முடிக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக பகுதி A விற்கான மானியத்தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமாக எடுத்துக்கூறி மேற்படி கடன்தொகையான (அதாவது திட்டமதிப்பீட்டில் 50% விழுக்காடு) ரூ.1330.93 கோடியை மானியமாக மாற்றம் செய்து தர வேண்டும்.

6. மேலும், மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.8647 கோடியானது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இல்லையாதலால் மானிய தொகையை ரூ.12,000 கோடியாக உயர்த்தி தர வேண்டும்.

7. மேலும், ஒன்றிய அரசின் மின்விநியோக நிறுவனத்தால் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 7 பைசாவில் இருந்து 1 பைசாவாககுறைத்து நிர்ணயம் செய்திட வேண்டும்.

8. மேலும், ரைகார் - புகளூர் - திருச்சூர் - உயர் மின்னழுத்த மின் வழிப்பாதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மின் வழிப்பாதையாக கருதப்பட வேண்டியும், மின் வழிப்பாதையில் உள்ள அனைத்து பயனாளர்களும் பயனடையும் படியும், நிதிச்சுமையை 720 கோடியில் இருந்து 216 கோடி வரை குறைத்து 504 கோடி சேமிப்பு செய்வதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. மேலும், ஒன்றிய அரசின் மின் விநியோக கழகத்தின் மூலம் மின் கொள்முதல் செய்து வழங்க வேண்டிய மீதமுள்ள 1100 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. மேலும், நிலுவையில் உள்ள ரூ.38.49 கோடி, ஒன்றிய அரசின் நிதி MNREஇல் இருந்து TEDA-விற்கு உடனடியாக வழங்க வேண்டும்.

11. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான மின்பாதையை உபயோகப்படுத்த செலுத்த வேண்டிய தொகையில் உள்ள கணக்கீடு குறைவை நிவர்த்தி செய்து TANGEDCO-விற்கு மாதம் ஒன்றுக்கு 48 கோடி வரையில் கூடுதல் செலவு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

12. மேலும், மின் கொள்முதலுக்கு உத்தரவாதமாக வங்கி உறுதி கடிதம் (Letter of Credit) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேற்கூறிய அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றித்தருமாறு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Tags : Minister ,Senthilpalaji ,Union Minister of , Minister Senthilpalaji submitted a petition containing 12 demands related to the energy sector to the Union Minister of Power.!
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...