×

முந்திரி பருப்பு லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக மாஜி அமைச்சர் மகனை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை..!!

புதுக்கோட்டை: முந்திரி பருப்பு லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மகனை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 26ம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து ரூ.1.10 கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றிக்கொண்டு, கன்டெய்னர் லாரி ஒன்று தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. லாரியை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டினார். தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி அருகே வந்தபோது, அந்த லாரியை கார் ஒன்று வழிமறித்தது.

காரில் இருந்து இறங்கிய நபர்கள், லாரி ஓட்டுநர் ஹரியை தாக்கி, அவரையும், லாரியையும் கடத்தி சென்றனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை தனிப்படை போலீஸார் சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்த போது அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் உள்பட 7 பேர் லாரியை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அனைவரையும் கைது செய்த போலீசார், ரூ. 1.10 கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பு, கன்டெய்னர் லாரி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மாஜி அமைச்சர் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி, ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தார்.

Tags : High Maji Minister ,Gunder , Cashew Lorry Lorry, son of former AIADMK minister, thug law
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர்...