×

மூன்றுவித கிரிக்கெட்டிலும் அஸ்வினுக்கு இடம்; கேப்டன் ரோஹித்சர்மா உறுதி

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி பலமுறை மேட்ச் வின்னராக இருந்திருக்கிறார். 2011ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பை வென்றபோதும் அணியில் இருந்தார். 2013-ல் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியதற்கு அஸ்வினும் முக்கிய காரணம். மேலும், மகேந்திரசிங் தோனி கேப்டனாக இருந்தபோது நம்பிக்கைக்குரிய சுழற்பந்து வீச்சாளராக இருந்து வந்தார். இதனால் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் விராட் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்ற சமயத்தில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால் அஸ்வினுக்கு ஒருநாள், டி20 அணிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது சாஹல், குல்தீப் இருவரும் பார்ம் அவுட் ஆகியிருப்பதால், மீண்டும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரை அணியில் சேர்த்தது முக்கியமானதாகப் கருதப்பட்டது. 2017ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம் வழங்கப்படாமல் திடீரென்று உலகக் கோப்பைக்கு தேர்வு செய்தது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்தது. அஸ்வினும் தன்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை வழங்கினார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். அதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியதால், 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை, அஸ்வினின் இடம் உறுதி என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதனை கேப்டன் ரோஹித் ஷர்மாவும் உறுதிப்படுத்துவது போல் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது “அஸ்வின் போன்ற அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரை ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் பயன்படுத்தலாம். அதாவது பவர் பிளே, மிடில் ஓவர், டெத் ஓவர் என எந்த இடத்திலும் அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர். அஸ்வின் போன்ற திறமையான பந்துவீச்சாளர் நமக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம்தான். இனி வரும் காலங்களில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடுவார்” எனத் தெரிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Ashwin ,Rohit Sharma , Ashwin has a place in all three types of cricket; Captain Rohit Sharma confirmed
× RELATED டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்: அஷ்வினுக்கு பாராட்டு விழா