ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த கேப்டன் வருண் சிங் மரணம் குன்னூரில் மகளிர் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்-அஞ்சலி

குன்னூர்:  கோவையில் இருந்து குன்னூர் ராணுவ மையத்திற்கு வந்த ஹெலிகாப்டர் கடந்த 8ம் தேதி காட்டேரி அருகே நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது‌. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 80 சதவீத தீக்காயம் அடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  பல அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் 7  நாட்களுக்கு பிறகு கேப்டன் வருண் சிங் சிகிச்சை  பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  இச்சம்பவம் அனைத்து மக்களையும் சோகத்தில்   ஆழ்த்தியுள்ளது. கேப்டன் வருண் சிங் இறந்ததன் மூலம் விபத்திற்குள்ளான ராணுவ   ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.

வருண் சிங்  மரணமடைந்ததை  தொடர்ந்து நீலகிரியில் பல்வேறு பகுதிகளிலும் அவருக்கு  பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் அஞ்சலி  செலுத்தினர்.  குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில்  மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து உயிரிழந்த வருண் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.குடியரசு தலைவரிடம் விருது பெற்றவர் கேப்டன் வருண் சிங் உத்தரபிரதேச மாநிலத்தின் தேவரீகா பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தந்தை கிருஷ்ண பிரதாப் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வருண் சிங் வெலிங்டன் ராணுவ மையத்தில் பணியமர்த்தப்பட்டார். வருண் சிங் மற்றும் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் குன்னூர் வெலிங்டனில் வசித்து வந்தார்.கடந்த சுதந்திர தினத்தன்று ‌குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சௌரிய சக்ரா விருது பெற்றார். கடந்த 2020 ஆண்டு வருண் சிங் போர் விமானத்தில் பயிற்சி ஈடுபட்டு வந்தார். அப்போது விமானத்தில் திடீரென தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டது.  அப்போது வருண் சிங் துணிச்சலாக விமானத்தை எவ்வித பாதிப்புமின்றி பத்திரமாக தரையிறக்கினார். இவரின் அசாத்திய திறமையை கண்டு பாராட்டி விருது வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்டார். அவரை உடனடியாக குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக வருண் சிங் பெங்களூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது‌. முக்கிய அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வருண் சிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்தது‌. 13 பேர் உயிரிழந்த நிலையில் மக்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வராத நிலையில் எப்படியாவது வருண் சிங் உயிர் பிழைக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து வந்தனர். ஆனால், அவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

36க்கும் மேற்பட்டோரிடம்  விசாரணை செல்போன் எண்கள் சேகரிப்பு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக 36க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்தது. குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் இறந்தனர். காயமடைந்து பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்கும் நேற்று மரணம் அடைந்தார். இந்த ஹெலிகாப்டர்  விபத்து குறித்து ஒன்றிய அரசு நியமித்த விசாரணை அதிகாரியான ஏர் மார்ஷல்  மன் வேந்தர் சிங்  தலைமையிலும், தமிழக காவல்துறை சார்பில் ஏடிஎஸ்பி  முத்துமாணிக்கம்  தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த  மறுநாள் தீவிர  சோதனைக்கு பிறகு கருப்புப்பெட்டி மீட்கப்பட்டு ஆய்விற்கு பெங்களூர்  விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஹெலிகாப்டரின்  எஞ்சிய பாகங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எரிந்த நிலையில் உள்ள பாகங்களின்  சாம்பலும் ஆய்விற்கு எடுக்கப்படுகிறது. விபத்து நடந்த தினத்தன்று நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் பதிவான செல்போன் எண்களும்  சேகரிக்கப்படுகின்றன. ஹெலிகாப்டர் விபத்தினை கடைசியாக வீடியோ எடுத்த கோவையை சேர்ந்த சுற்றுலா பயணி நாசர் என்பவரின் செல்போன் பறிமுதல் செய்து வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் உயர் மின் அழுத்த கம்பங்கள் இல்லை என மின்சாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர்கள், தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வருவாய் துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் என சுமார் 36க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை குழு விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பு பூஜை‌

ஹெலிகாப்டர் விபத்து நடந்து இன்றுடன் 8வது நாள் என்பதால் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரில் இருந்து இரண்டு புரோகிதர்களை கொண்டு விபத்து நடந்த இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் அந்த இடத்தில் இறந்து போயினர். அந்த இடத்தில் பால் ஊற்றி பூஜைகள் நடைபெற்றது. அந்த பகுதி ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதால் ராணுவத்தினரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Related Stories: