×

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில் மேலும் 8 பேருக்கு முதற்கட்ட அறிகுறி: மருத்துவத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை 15 நாடுகளில் இருந்து வந்த 14,450 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, நிதர்லாந்து, சுவீடன், ஸ்பெயின், தான்சன்யா, சிங்கப்பூர், அமெரிக்கா, அரபு நாடுகள், இலங்கை, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி யாருக்கு நெகட்டிவ் வருகிறதோ அவர்கள் வீட்டில் 8 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு 8 நாள் தனிமைக்கு பிறகு பரிசோதனை மேற்கொண்டதில் 16 பேருக்கு பாசிட்டிவ் வந்தது. இதில் நைஜீரியாவில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்ததில் 6 பேருக்கு பாசிட்டிவ் வந்தது.

ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 7 பேருக்கு மரபணு மாற்றமடைந்துள்ள தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவதுறை செயலாளர் பேட்டியளித்துள்ளார். காங்கோ நாட்டிலிருந்து ஆரணி வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி தெரிகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் இதுவரை 73 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை கழுவுதல், காற்றோட்டமுள்ள அறைகளை பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது பதற்றப்பட வேண்டிய நேரம் அல்ல. அனைவரும் ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக போராட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 80 லட்சம் பேர் இன்னும் 2வது டோஸ் தடுப்பூசி போடாத நிலைமை உள்ளது. இதனை பொதுமக்கள் உணர்ந்து 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று பரவினாலும் நோய் பாதிப்பு அதிகமாக இருக்காது என்று உலக சுகாதார மூத்த மருத்துவர்கள் பேட்டி அளித்துள்ளனர். முகக்கவசம் அணிவதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 40,024 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. 25,075 சாதாரண படுக்கைகள் தயாராக உள்ளன. 8,679 ஐசியூ படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்திலும் 5%க்கு கீழே தான் தற்போது நோயாளிகள் உள்ளனர். தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. அதேநேரத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தங்களுக்கு ஏதேனும் அறிகுறி தெரிந்தால் பயம் கொள்ளாமல் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க மருத்துவத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Secretary of Medicine , omicron
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...