×

தேனி கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் பழுதாகி ஒரு வருஷமாச்சு: மாற்றுத்திறனாளிகள் அவதி

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லிப்ட் பழுதாகி ஓராண்டை கடந்தும் சரிசெய்யாததால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்துடன் படியேறி அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலிம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலங்கள் உள்ளன. வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மூன்று மாடி கட்டிடங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இவ்வலுவலகங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் துறை அலுவலகங்களில் பணிபுரிவோர் வந்து செல்கின்றனர். இவர்களில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த லிப்ட் மூலம் மாற்றுத்திறனாளி பொதுமக்கள், அலுவலர்கள் அலுவலகங்களுக்கு சென்று வர பயன்படுத்தி வந்தனர். இத்தகைய பயன்பாடுடைய லிப்ட் பழுதாகி ஓராண்டு காலத்திற்கும் மேலாகி விட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்துடன் ஏராளமான படிக்கட்டுக்களை கடந்து அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். இதேபோல மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மனு ரசீது பதிவு செய்யும் பகுதியிலும் மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லும் போது பிடித்து செல்லும் கைப்பிடிகளும் பழுதாகி உள்ளது. எனவே கலெக்டர் மாற்றுத்திறனாளிகளின் வசதியை கருத்தில் கொண்டு லிப்ட் பழுதை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Theney , A year after the lift repair at Theni Collector's office: People with disabilities suffer
× RELATED தேனி மாவட்டம் போடி அருகே...