×

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையில் அரசின் நிலைப்பாடு என்ன?... தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீதான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா. முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை ஆணைய அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சூரப்பா தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணையத்தின் மீதான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

முன்னாள் துணை வேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கைகளை தொடர போகிறீர்களா? மனுதாரர் தொடர் அச்சத்திலேயே இருக்க முடியுமா? இது ஊழலாக இருந்தால் விட மட்டோம்.  இது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி விளக்கமளிக்க வேண்டும் என்றார்.   இதற்கு அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறியதை அடுத்து விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.



Tags : Anna University ,Vice Chancellor ,Surappa , Anna University. What is the position of the government in the investigation on former Vice Chancellor Surappa?
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!