×

சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இசிஆர் சொகுசு பங்களா உட்பட 14 இடங்களில் அதிரடி சோதனை: கட்டுக்கட்டாக சொத்து ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்த விவகாரத்தில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இசிஆரில் உள்ள சொகுசு பங்களா உட்பட சென்னையில் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த பினாமிகள் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த பள்ளிபாளையம் பகுதியில் அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி தனது மனைவி சாந்தியுடன் வசித்து வருகிறார். இவரது மகன் தரணிதரன் சேலத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

தங்கமணி, கடந்த 23.5.2016 முதல் 6.5.2021 வரை அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று ஒரே நேரத்தில் தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், நிறுவனங்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகள் என 69 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னையில் தங்கமணிக்கு சொந்தமான மற்றும் பினாமிகளின் வீடுகள் என 14 இடங்களில் சோதனை நடந்தது.

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தங்கமணிக்கு சொந்தமான எம்எல்ஏ விடுதி, கீழ்ப்பாக்கம், ராஜரத்தினம் சாலையில் உள்ள சத்தியமூர்த்தி அன்கோ நிறுவனம், பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் பங்குதாரரான சிவசுப்பிரமணியன் வீடு, அண்ணாநகர் பகுதியில் உள்ள சசிரேகா வீடு, நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள தங்கமணிக்கு சொந்தமான பி.எஸ்.டி. இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம், மதுரவாயல் 2வது மெயின் ரோடு, திருகுமரா நகரில் உள்ள தருண் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனம், எழும்பூர் காசாமேஜர் சாலையில் வசித்து வரும் தொழில் பங்குதாரர் ஆனந்தவடிவேல் வீடு,

அரும்பாக்கம் பி.எச்.ரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள தங்கமணிக்கு சொந்தமான ெஜய பில்டர்ஸ் பிஆர்ஓ நிறுவனம், அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் உள்ள தங்கமணியின் மருமகனுக்கு சொந்தமான  பிளேவுட்ஸ் நிறுவனம், கோயம்பேடு எஸ்.ஏ.எப். கேம்ப்ஸ் வில்லேஜ் பகுதியில் வசித்து வரும் தொழில் பங்குதாரரான ஜனார்த்தனன் வீடு, தங்கமணிக்கு சொந்தமான பனையூர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள பல கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா, தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள சுவாதி காம்ப்ளக்ஸ் 3வது தளத்தில் உள்ள ஈஷா முருகன் மினிஸ்-முருகன் எர்த்மூவர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், செனாய்நகர்,

செல்லம்மாள் தெரு உள்ள எம்.வி. காம்ப்ளக்ஸ் 3வது தளத்தில் வசித்து வரும் தொழில் பங்குதாரரான சி.கே.வெங்கடாசலம் வீடு என சென்னை முழுவதும் 14 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள், சொத்து பத்திரங்கள் குறித்து தங்கமணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் கிழக்கு கடற்கரை பனையூரில் உள்ள சொகுசு பங்களாவில் இருந்து பினாமிகள் பெயரில் வாங்கி குவித்த சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்காய்வு செய்த பிறகு தான் எத்தனை கோடிக்கு பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது என்று தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,ECR ,minister ,Thangamani , In Chennai, raids were carried out at 14 places, including the ECR luxury bungalow owned by former minister Thangamani: property documents confiscated.
× RELATED குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி பொருத்தி போலீசார் கண்காணிப்பு