தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதுவரை வந்த வைரஸ்களை காட்டிலும் இது வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே இதில் இருந்து மீள்வதற்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதும், தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதும் மட்டுமே தீர்வு.

சென்னை  பன்னாட்டு விமான நிலையம் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மரபணு பரிசோதனை, டெக்பாத் மூலம் பரிசோதனை என்று பல்வேறு அதிநவீன வசதிகள் நம்முடைய துறையில் உள்ளது. இதனால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடிகிறது. பயணிகளுகளோடு தொடர்பு என்ற வகையில் பரிசோதிக்கப்பட்டதில் 7 பேருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. இதில் 3 பேர் தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை கிங் இன்ஸ்ட்டியூட் உள்ளிட்டு திருச்சி, நாகர்கோயில், சென்னை போன்ற பல்வேறு இடங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவோர் 41 பேர்.

இந்தநிலையில் தான் நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினரை பரிசோதித்த போது 6 பேருக்கு மரபியல் மாற்றம் கொண்ட தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இப்போது அந்த 7 பேரும் கிங் இன்ஸ்ட்டியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் சிறிய அளவிலான பாதிப்பு தான் உள்ளது. நலமுடன் இருக்கிறார்கள் என்றாலும் தீவிர மருத்துவக்கண்காணிப்பு  துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஒமிக்ரான் இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. இதையடுத்து ஒன்றிய அரசு அனுமதி அளித்திருக்கின்ற ஆய்வு மையங்களான பெங்களூரு, புனே, ஐதராபாத் போன்ற இடங்களுக்கு மாதிரிகள் அனுப்பி வைத்தோம். இதில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பதை உறுதி செய்து தகவல் அனுப்பி இருக்கிறார்கள். அவரது குடும்பத்தினருடைய மாதிரிகள் மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவருடன் தொடர்புடையவர் என்கிற வகையில் கடந்த 2 நாட்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்ததில், வளசரவாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு மரபியில் மாற்றம் கொண்ட தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவரையும் கிங்  இன்ஸ்ட்டியூட் மருத்துமனையில் சேர்க்க கூறியிருக்கிறோம். இந்த 7 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுவரை இந்தியாவில் 70 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: