×

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுகிறார் மக்கள் ஓட்டு போடாததால் தேர்தலில் பாமக தோற்றது: ராமதாசுக்கு எடப்பாடி பதிலடி

ஓமலூர்: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு நாங்கள் எந்த துரோகமும் செய்யவில்லை. மக்கள் ஓட்டுப்போடாததால் அந்தக்கட்சியின் வேட்பாளர்கள் தோற்றார்கள் என்று சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலத்தை அடுத்த ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: அதிமுகவை ஒழிப்பதற்காக விஜிலென்ஸ் நடத்தும் சோதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது. எங்கள் கட்சியின் உட்கட்சித் தேர்தல் எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இதனை திசை திருப்புவதற்காக சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் சட்டரீதியாக சந்திப்போம்.

அதிமுக கூட்டணியில் இருந்தபோது துரோகம் செய்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அப்படி என்ன துரோகம் செய்தோம் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். பாமக வேட்பாளர்களுக்கு நீங்களும், நானும் மட்டும் ஓட்டு போட்டால் போதாது. மக்களும் ஓட்டுப்போட வேண்டும். மக்கள் ஓட்டுப்போடாததால் பாமக வேட்பாளர்கள் தோற்றார்கள். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை. எங்கள் கூட்டணியில் அவர்கள் இப்போது இல்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மற்றும் சேலத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ‘‘தேர்தல் கூட்டணி என்றாலே பயமாக இருக்கிறது. காலை வாறுவதுதான் கூட்டணியாக உள்ளது. கூட்டணி அமைத்து போட்டியிட்டால், அந்த கட்சி கூட்டணி தர்மத்தை மதிப்பதில்லை. கடந்த தேர்தலில் குறைந்தபட்சம் 15 தொகுதிகளாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 5 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்திருக்கிறோம். இனிமேல் இது போன்ற துரோக கூட்டணிக்கு செல்லக் கூடாது’’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் கருத்து தெரிவித்திருப்பது அதிமுக-பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Edapadi ,Ramadasu , Electoral alliance shifts to polls Pamaka loses polls as people do not vote
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்...