நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படவுள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் அறிக்கை

சென்னை: அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த புதிய சட்ட முன்வடிவை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடர்களில் கொண்டுவரவுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழகம் முழுதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்குகளில் தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதமே தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நீர் நிலைகள் குறித்த புள்ளி விபரங்களை காண தமிழ் நிலம் என்ற இணையதளத்தில், அனைத்து நீர் நிலைகளின் விபரங்களும் தாலுகா வாரியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த பட்டியலை போர்க்கால அடிப்படையில் தயாரித்து அதை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்யப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் 47,707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 4862 அரசு கட்டிடங்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளது.

 நீர்நிலைகளை நேரடியாக அளவீடு செய்வதற்கு 12 மாத கால அவகாசம் தேவைப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தின்படி அகற்றப்பட்டு வரும் நிலையில், அனைத்து நீர்நிலைகளையும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் புதிய சட்ட முன்வடி எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடர்களில் கொண்டு வரப்படும். ஆக்கிரமிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே வலுவான ஒரு செய்தியை அரசு தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார்.

அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, வருவாய் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 313 தாலுக்காக்கள் உள்ளன. தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகள் குறித்த விவரங்கள் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பதற்காக தலைமை செயலாளர் வெ.இறையன்பு நாளை (இன்று) ஆஜராக வேண்டுமென்ற உத்தரவிற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தலைமை செயலாளர் ஆஜராக வேண்டுமென்ற உத்தரவிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டனர். மேலும் பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள முகவரியையும் நாளை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: