ஓபிஎஸ், இபிஎஸ் மீது ஆணையத்தில் புகார்

புதுடெல்லி: நடத்தப்பட்ட அதிமுக உட்கட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி  புகார் மனு கொடுத்துள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிகாரத்தை பயன்படுத்தி கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் செய்துள்ளனர். அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

மேலும் அ.தி.மு.கவின் விதிகளை திருத்தியது சட்டத்திற்கு முரணானது. இதில் அதிமுக கட்சியில் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. அனைத்து சட்ட விதிகளும் மீறப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான முறைகேடுகளும் நடந்துள்ளது. இதில் கட்சி உறுப்பினர்கள் யாருடைய மனுவையும் பெறாமல் போட்டியின்றி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதாக கடந்த 6ம் தேதி அறிவித்தனர். அதனால் இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு தலைமை தேர்தல் ஆணையம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: