×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

புதுக்கோட்டை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். புதுக்கோட்டையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று அளித்த பேட்டி: வரும் ஜனவரி 25ம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிவிட்டது. அதனால் அதற்குள்ளாகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும். தள்ளி போவதற்கான வாய்ப்பு இல்லை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது. ஏனெனில் எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் தயாராக இருந்த நிலையில், ஆளுங்கட்சியாக தற்போது இருக்கும் போது எங்களுக்கு தயக்கம் இல்லை. புதிதாக வந்த 25 நகராட்சி உட்பட அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் ஒருமுக தேர்தலாக நடைபெறும். உள்ளாட்சி தேர்தலுக்கு பின் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெறும்.  

இதுகுறித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது எங்கள் மீது வழக்குப் போட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றால், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனையும், அரசியல் காழ்ப்புணர்ச்சி என வைத்துக்கொள்ளலாம். ஆவணங்களின் அடிப்படையில் காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் மூலமாகவே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நிரபராதி என்றால் நீதிமன்றத்திற்கு சென்று குற்றமற்றவர் என நிரூபிக்கலாம். ஆட்சி மாற்றம் ஏற்படும் போது அதற்கு முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்பது இயல்புதான். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘உதயநிதி அமைச்சராவதே அனைவரின் விருப்பம்’
அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பாடுபட்ட உதயநிதி, அமைச்சராக வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமே. ஒரு அமைச்சரை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது. இதனால் உதயநிதி, அமைச்சராக வரும் பட்சத்தில் நாங்கள் வரவேற்போம். என்றார். இதே போல புதுக்கோட்டையில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது எங்களது ஆசை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆசை. ஆனால் அது குறித்து முடிவு செய்ய வேண்டியது தமிழக முதல்வரின் கையில் உள்ளது என்றார்.

Tags : Minister ,KN Nehru , No chance of postponing urban local body elections: Interview with Minister KN Nehru
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...