×

பெட்ரோல், டீசல் மீதான வரிகளால் கடந்த 3 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு வருவாய்!: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்..!!

டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளால் கடந்த 3 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், எரிபொருள் வரி மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு வருவாய் கிடைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தகவல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்‍கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த நிர்மலா சீதாராமன், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 19 ரூபாய் 48 காசாக இருந்ததாகவும், இது 2021ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி 27 ரூபாய் 90 காசாக உயர்த்தப்பட்டதாகவும், இதே காலக்கட்டத்தில், டீசல் மீதான கலால் வரி 15 ரூபாய் 33 காசிலிருந்து 21 ரூபாய் 80 காசாக அதிகரிக்‍கப்படட்டதாகவும் தெரிவித்தார். குறிப்பாக 2020 - 21 நிதியாண்டில் அரசுக்கு 3 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக கூறினார்.

ஒட்டுமொத்தமாக  கடந்த 3 ஆண்டுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மற்றும் செஸ் வரியால் ஒன்றிய அரசுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 4ம் தேதியன்று, பெட்ரோல் , டீசல் மீதான கலால் வரியை பெட்ரோல் லிட்டருக்கு தலா 5 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 10 ரூபாய் எனவும் ஒன்றிய அரசு குறைத்தது. மத்திய அரசை பின்பற்றி பல்வேறு மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Union Government ,Finance Minister ,Nirmala Sitharaman ,Parliament , Fuel tax, Rs 8 lakh crore, Nirmala Sitharaman
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...