குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் இல்லை: மின்துறை விளக்கம்

நீலகிரி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விபத்து நடந்த இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் இல்லை என்று மின்துறை விளக்கம் அளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீலகிரி விசாரணை குழு இதுவரை 80 பேரிடம் விசாரணையை நடத்தியுள்ளது.

இதில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாவதற்கு முன்பு கடைசியாக படம் பிடித்த கோவையை சேர்ந்த நாசரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு கோவை தடயவியல் ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானவுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விசாரணை குழுவிடம் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அதேபோன்று விபத்து நடந்த இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் இல்லை என்றும் மின்துறை விளக்கம் அளித்துள்ளது. ஹெலிகாப்டர் விழுந்ததில் தெருவிளக்குடன் கூடிய மின்கம்பம் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: