×

ஒருநாள் போட்டிகளிலும் கோஹ்லி ஆடுகிறார்: இந்திய கிரிக்கெட் அணி நாளை தென்ஆப்ரிக்கா பயணம்: டெஸ்ட் அணி துணை கேப்டனாகிறார் கே.எல்.ராகுல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் வரும் 26ம் தேதி  செஞ்சூரியனில்  தொடங்குகிறது. 2வது டெஸ்ட் ஜன.3-7ம் தேதி வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், கடைசி டெஸ்ட் ஜன.11-15 வரைகேப்டவுனிலும் நடக்கிறது.  டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக மும்பையில் நட்சத்திர ஓட்டலில் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இந்திய அணியினர் நாளை பிற்பகலில் தென்ஆப்ரிக்கா புறப்படுகின்றனர். அங்கு சொகுசு ஓட்டலில்   தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் பயிற்சியை தொடங்குவார்கள்.  தொடை பகுதியில் காயம் காரணமாக  துணை கேப்டன் ரோகித்சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் துணை கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிக்கான துணை கேப்டனாக இருந்த ரகானேவிடம் இருந்து மோசமான பார்ம் காரணமாக பதவி  பறிக்கப்பட்டு ரோகித்சர்மாவிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ரோகித்சர்மா விலகலால்  கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

 இதனிடையே தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோஹ்லி விளையாட மாட்டார் என தகவல் பரவியது. அவரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அவர் மனவேதனையில் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், குடும்பத்துடன் கூடுதல் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை கோஹ்லியும், பிசிசிஐயும் இதுவரை தெளிவுபடுத்த வில்லை. இதனிடையே விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகளை புறக்கணிப்பதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று பிசிசிஐயின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் கூறினார், அவர் முற்றிலும் அர்ப்பணிப்புள்ள கிரிக்கெட் வீரர், அவர் பங்கேற்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார். தென்ஆப்ரிக்கா புறப்படுவதற்கு முன்னதாக இன்று பிற்பகலில் கேப்டன் விராட் கோஹ்லி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது அவர் தனது நிலைபாட்டை விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் போட்டியிலும் ரோகித் சர்மா விலகல்?
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித்சர்மா பயிற்சியின் போது இடதுதொடை தசையில்  காயம் அடைந்துள்ளதால்  தென்ஆப்ரிக்க டெஸ்ட்தொடரில் விளையாட வில்லை. தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி இன்னும்அறிவிக்கப்படவில்லை.வரும் 26ம் தேதி விஜய் ஹசாரே தொடரின் இறுதிபோட்டிக்கு பின் ஒருநாள்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. ஒருநாள் போட்டிகளில் ரோகித்சர்மா  ஆட முடியுமா என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. ரோகித்சர்மா காயத்தில் இருந்து குணமடையாவிடில் ஒருநாள் போட்டியிலும் இடம்பெற முடியாது.  அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துவார்.

தென்ஆப்ரிக்கா சலுகை
இந்திய வீரர்கள் நாளை பிற்பகலில் தனி விமானத்தில் தென்ஆப்ரிக்கா புறப்படுகின்றனர். ஜோகன்னஸ்பர்க் சென்றடையும் வீரர்களுக்கு அங்கு 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தென்ஆப்ரிக்கா சென்றவுடன் இந்திய வீரர்கள் கடினமான தனிமைப்படுத்தலில் நுழைய வேண்டிய அவசியமில்லை. ஒருநாள் மட்டும் தனிமைப்படுத்தப்படுவார்கள் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் 17ம்தேதி முதல் பயிற்சியை தொடங்குவார்கள்.

Tags : Kohli ,cricket team ,South Africa ,KL ,Rahul , Kohli, Indian cricket team, tour of South Africa
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு