×

பிரேசிலில் விளைச்சல் பாதிப்பால் கொடைக்கானல் மலைப்பகுதி காப்பிக்கொட்டைக்கு ஓவர் மவுசு: விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல்: உறைபனி, கனமழையால் பிரேசிலில் காப்பிக்கொட்டைகள் விளைச்சல் பாதிப்படைந்ததால் ெகாடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் காப்பிக்கொட்டைகளுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உலகில் காப்பி கொட்டைகள் உற்பத்தியில்  முதன்மையாக உள்ள நாடு பிரேசில். இந்நாட்டில் கடந்த மாதத்தில் கடும்  உறைபனியும், அதனை தொடர்ந்து தொடர் கனமழையும் பெய்ததால் காப்பிக்கொட்டைகள்  உற்பத்தி அங்கு 50 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இதனால் திண்டுக்கல் மாவட்டம்,  கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காப்பி கொட்டைகளுக்கு விலை  உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள காப்பி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் இயங்கி வரும் தென்மண்டல காப்பி ஆராய்ச்சி நிலைய முனைவர் பாபு  கூறுகையில், ‘‘பிரேசிலில் கடும் உறைபனி, கனமழை காரணமாக காப்பிக்கொட்டை  விளைச்சல் பாதிக்கும் மேல் சரிந்துள்ளது.

இதனால் கொடைக்கானலில்  விளைவிக்கப்படும் காப்பி கொட்டைகளுக்கு நாடு முழுவதும் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.250க்கு விலை போன காப்பிக்கொட்டை தற்போது கிலோ ஒன்றிற்கு ரூ.300 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்னும்  அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர்  கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காப்பிக்கொட்டைகள் விலை உயர்வு விவசாயிகளிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

Tags : Kodaikanal ,Brazil , Brazil, Yield Impact, Kodaikanal, Coffee, price increase, farmers
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்