ஊராட்சி அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை

ராணிப்பேட்டை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் ஊராட்சி அமைப்புகளும் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சூற்றுச்சூழல் மாசு தடுக்கும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

அனைத்து அளவு மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கோப்பைகள்,  நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், தட்டுகள், உணவுப் பொருட்களை பார்சல் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், விநியோகிக்கவும் தடை செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம்(தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இத்தடை ஆணையை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டங்கள், மாவட்டம்தோறும் பெருந்திரள் விழிப்புணர்வு பேரணிகள், சமூக ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு, தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்பு பதாகைகள் நிறுவுதல் போன்றவை மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக எழுந்த புகாரின்பேரில், அவற்றை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து மூடும் நடவடிக்கைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலை வளாகம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். ஊராட்சி அமைப்புகளான நகராட்சி, பேரூராட்சிகள் தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுத்து பறிமுதல் செய்தல் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

Related Stories: