×

வேதாரண்யத்திலிருந்து நாகைக்கு படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பஸ்: கலெக்டர் படமெடுத்து அனுப்பியதால் போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை

நாகை: நாகை அருகே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ்சை சிறைபிடிக்க கலெக்டர் அருண்தம்புராஜ் செல்போன் மூலம் படம் எடுத்து அனுப்பி உத்தரவிட்டார். அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதால் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் பயணிகள் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க படிக்கட்டுகளில் பயணிகளை தொங்கியபடி ஏற்றி செல்ல கூடாது.

பள்ளி மற்றும் அலுவலகம் தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நாகை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 21 அரசு பஸ்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று வேதாரண்யத்தில் இருந்து நாகை நோக்கி தனியார் பஸ் வந்தது. இதில் படிக்கட்டுகளில் தொங்கிய படி புத்தகபையுடன் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் வந்தனர். அப்போது நாகையில் இருந்து வேதாரண்யம் நோக்கி காரில் சென்ற கலெக்டர் அருண்தம்புராஜ் அந்த பஸ்சை கவனித்தார்.

உடனே தனது செல்போன் மூலம் போட்டோ எடுத்து அதை வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த புகைப்படத்தை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபு பெற்று கொண்டு நாகை அருகே புத்தூர் ரவுண்டானாவிற்கு வந்தார். அந்த வழியாக வந்த அந்த தனியார் பஸ்சில் படிக்கட்டில் தொங்கிய படி பயணிகள் வந்ததை பார்த்த போக்குவரத்து ஆய்வாளர் பஸ்சை சிறைபிடித்தார்.

பயணிகளை வேறு ஒரு பஸ்சில் ஏற்றிவிட்ட பின்னர் பஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பஸ் உரிமையாளர்கள் கலெக்டரிடம் எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்த பின்னர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் அபராதம் விதித்து பஸ் விடுவிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vedaranyam ,Naga , Vedaranyam, School Students, Collector, Transport Officer
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்