×

வெள்ளப்பெருக்கு காலங்களில் கண்டுகளிக்க கும்பக்கரை அருவியில் ‘வியூ பாயிண்ட்’ அமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

தேனி:  தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கனமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இந்த அருவியில் மெயின்அருவி, யானைக் கஜம், பாம்பு கஜம், உரல் கஜம் என பல்வேறு பாறை சுரங்கங்கள் உள்ளன. அருவியில் குறைவான தண்ணீர் வரும்போது, சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்த்து குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.

இதற்காக, அருவிக்கு செல்லும் சாலையில் அருவிக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் முன்பாக டிக்கட் கவுண்டர் மற்றும் சோதனைச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கின்றனர். தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர். கொடைக்கானல், தேக்கடி, மூணாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கும் வந்து செல்கின்றனர். அருவி பகுதியில் இருந்து கொடைக்கானல் செல்ல, அடுக்கம் வழியாக போக்குவரத்து சாலை உள்ளது. இதனால், அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்வோரும், கும்பக்கரைக்கு வருகின்றனர்.  

ஏமாற்றம் அடையும் சுற்றுலாப் பயணிகள்: இந்நிலையில், அருவியில் அதிகமாகவும், மிகக்குறைவாகவும் தண்ணீர் வரும்போது சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதிக்கின்றனர். இதனால், தொலை தூரங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக பருவமழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

வியூ பாயிண்ட் அமைக்க கோரிக்கை: கும்பக்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைவதை தடுக்கும் வகையில், அருவியைச் சுற்றி உள்ள பகுதி வனத்துறைக்கு சொந்தமான பகுதியாக இருப்பதால், டிக்கட் கவுண்டர் உள்ள பகுதியில் இருந்து மெயின் அருவி வரை தனிப்பாதை அமைத்து, அந்த இடத்தில் தடுப்பு அமைத்து அருவியின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க வசதியாக ‘வியூ பாயிண்ட்’ அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வியூ பாயிண்டில் நின்றபடி அருவியின் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிக்கலாம். எனவே, மாவட்ட நிர்வாகம் வனத்துறை மூலமாக கும்பக்கரை அருவியில் ‘வியூ பாயிண்ட்’ அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Kumbakara Falls , Kodaikanal, Bear Oasis Falls, Permission, Tourists
× RELATED குவியும் சுற்றுலாப் பயணிகளால் கும்பக்கரை அருவியில் ‘ரஷ்’