×

மணப்பாறை அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்

மணப்பாறை: மணப்பாறை அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருச்சி - திண்டுக்கல் ரயில் பாதையில் உள்ள கத்திக்காரன்பட்டி ரயில்வே கிராஸிங் மிகவும் குறுகலாக இருப்பதாலும், ரயில்கள் வரும்போது அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதாலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனையடுத்து, இப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இப்பகுதியில், ரயில்வே சுரங்கப்பாதை அமைத்தால் மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் அன்றாட போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என கருதும் இப்பகுதி மக்கள் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பல மனுக்களை ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதுரையிலிருந்து, திருச்சி வரை ஆய்வு செய்ய ரயில்வே துறையின் மதுரை பொது மேலாளர் வருவதாக கிடைத்த தகவலையடுத்து, தங்களிடம் நேரில் மனுவை பெற்று கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கத்திக்காரன்பட்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் உட்கார்ந்து 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும், இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் கதிர் அறுக்கும் இயந்திரம், போர் வண்டி, லாரி மற்றும் திருச்சி-சமுத்திரம் வரை இயங்கும் டவுன் பஸ், மணப்பாறையிலிருந்து இனாம்குளத்தூர் வரை இயக்கப்படும் பஸ்கள் செல்ல பாதிப்பு ஏற்படும்.

எனவே, சுரங்கப்பாதை அமைக்கும் முடிவை கைவிட்டு மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை முழக்கமிட்டு கத்திக்காரன்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ஆவல் காமாநாயக்கன்பட்டி, சுக்காம்பட்டி, பொம்மா நாயக்கன்பட்டி, சந்திரா நாயக்கன்பட்டி, சாரணக்குடி, சின்ன சமுத்திரம், காந்திநகர் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மணப்பாறை போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். 2 மணி நேரமாக நடந்த இந்த தண்டவாள மறியலால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Manapparai , People sit on the tracks and protest demanding the construction of a railway flyover near Manapparai
× RELATED மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில்...