×

சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்தபோது கார் டிரைவராக பணியாற்றினேன்; ரஷ்ய அதிபர் புடின் கூறிய வியக்க வைக்கும் தகவல்

மாஸ்கோ: சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது பொருளாதார நெருக்கடியின் காரணமாக கார் டிரைவராக பணியாற்றினேன் என்று உலகின் மிகவும் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான ரஷ்ய அதிபர் புடின், வியக்க வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். சோசலிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் கடந்த 1991ம் ஆண்டு வீழ்ச்சியடைந்து, ரஷ்யா உள்பட பல்வேறு குடியரசு நாடுகள் உருவாகின. சோவியத் ஒன்றியத்தின் உளவு படையில் பணியாற்றிய ரஷ்யாவின் தற்போதைய அதிபர் புடின், இப்போதும் சோவியத் ஒன்றியத்தின் கோட்பாடுகளை நம்புகிறார். சோவியத் ஒன்றிய வீழ்ச்சியை மிகப்பெரும் அரசியல் பேரழிவாக கருதுகிறார். இந்த நிலையில் சோவியத் ஒன்றிய வீழ்ச்சியின் போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக தான் கார் டிரைவராக பணியாற்றியதாக புடின் தற்போது தெரிவித்துள்ளார்.

சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி குறித்த ஆவணப்படம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த ஆவணப்படத்தில் அவர் பேசியுள்ளதாவது: உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது குறித்துப் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுதான் நடந்தது. அதுதான் உண்மை. 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சோவியத் யூனியன் வீழ்ச்சி என்பது பெரும்பாலான பொதுமக்களுக்கு மிகப் பெரிய சோகமாகவே இருந்தது. அந்த நேரத்தில் நான் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. இதற்காக நான் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றினேன். இவ்வாறு புடின் பேசினார். உலகின் மிகவும் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவராக அறியப்படும் புடின், 30 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடியால் கார் டிரைவராக பணியாற்றினார் என்கிற தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Soviet ,Union ,Russian ,President ,Putin , I worked as a car driver when the Soviet Union collapsed; Surprising information given by Russian President Putin
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...