×

நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரானா?; பரிசோதனை முடிவுகள் இன்று மாலை அல்லது நாளை தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய ஆர்டிபிசிஆர் கருவி, கோவிட் நுரையீரல் மறுவாழ்வு மையம், புற்றுநோய் பரிசோதனை மையம், வாட்டர் பெட் சிறப்பு வார்டு திறப்பு விழா இன்று நடந்தது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். இதைதொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: திமுக அரசு பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டில் 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டும் கையிருப்பு இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த சீரிய நடவடிக்கையால் தற்போது 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான அளவில் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அரசிடம் 25,660 ஆக்சிஜன் சிலிண்டர், 70 பி.எம் கேர் நிதியிலிருந்து கட்டப்பட்ட ஆக்சிஜன் ஆலைகள், 94 தனியார் பங்களிப்போடு கூடிய ஆக்சிஜன் ஆலைகள், அரசு சார்பில் 241 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு ஆக்சிஜன் ஆலைகள் இல்லை.

அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளும் வசதிகள் துவங்கப்பட்டுள்ளது. படுக்கை புண் நோயால் பாதிக்கப்படுவோருக்காக அரசு மருத்துவமனைகளில் 10 பிரத்யேக படுக்கை வசதிகள் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 69 அரசு மருத்துவமனைகளில் 79 ஆர்டிபிசிஆர் பரிசோதனை கருவி உள்ளது. அதன்மூலம் நாளொன்றுக்கு 1,88,500 பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். தற்போது கூடுதலாக 20 ஆர்டிபிசிஆர் சோதனை மையங்கள் அமைத்துள்ளோம். 2 நாட்களுக்கு முன் நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த 47 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கும், அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களின் ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனைக்காக பெங்களூருக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனை முடிவுகள் இன்று மாலை அல்லது நாளை தெரியவரும் என்றார்.

Tags : Omigrana ,Nigeria ,Minister ,Subramanian , Nigeria, Omigrana, Experimental Results, Interview with Mr. Subramanian
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு