×

மணிமுக்தா ஆற்றில் ஆரத்தி வழிபாடு

விருத்தாசலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் உருவாகி விருத்தாசலம் வழியாக மணிமுக்தாறு செல்கிறது. விருத்தாசலம் தல தீர்த்தமான மணிமுக்தாற்றில் நீராடி விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால், கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் மணிமுக்தாற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால் அது சுண்ணாம்பு கற்களாக மாறி இங்கேயே தங்கி விடுவதாக தலப்புராணம் கூறுகிறது‌. முக்தியை தருகின்ற முக்தாறு நதி விருத்தாசலம் நகரை இரண்டாக பிரித்துக் கொண்டு விருத்தகிரீஸ்வரரை வலமாகச் சூழ்ந்து ஓடி நகருக்கு அழகு சேர்க்கிறது. சுந்தரர் இறைவனை பாடல் பெற்ற 12000 பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்றெண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுக்தாற்றில் வீசிவிட்டு, திருவாரூர் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருளினார்.

சிவகாமி அம்மையார் என்பவருக்கு திருக்கோயிலில் விளக்கேற்ற எண்ணைக்கு பதில் மணிமுக்தாற்றின் புண்ணிய மேட்டில் தீர்த்தம் எடுத்து விளக்கேற்ற அருள் பாலித்தார் விருத்தாம்பிகை அம்மன். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆறு வற்றாத ஜீவ நதியாக ஓட வேண்டும் என்று வேண்டி விருத்தகிரீஸ்வரர் அர்த்தஜாம அடியார் வளர்ச்சிக் குழு சார்பில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலை மணிமுக்தாறு படித்துறையில், (காசியில் கங்கை நதிக்கு ஆரத்தி எடுப்பது போல) ஆரத்தி எடுக்கும் விழா நடந்தது. அப்போது மணிமுக்தா அன்னையிடம் வற்றாத ஜீவ நதியாக ஓட வேண்டும் என விண்ணப்பம் செய்து வழிபாடு செய்து சிவாச்சாரியர்கள் மணிமுக்தாற்றில் ஆரத்தி எடுக்க, கூடியிருந்த பக்தர்கள் நெய் தீபமேற்றினர்.


Tags : Aarti ,Manimukta river , Manimukta river, Aarti, worship
× RELATED மணப்பாறை அருகே வாக்களித்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்