×

டென்னிஸ் ஏடிபி தரவரிசை; முதல் 10 இடத்தில் 8 இளம் வீரர்கள்

மெல்போர்ன்: இந்த ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் டென்னிஸ் ஏடிபி தரவரிசை பட்டியலில் நோவாக் ஜோகோவிச் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் தரவரிசையில் 2ம் இடத்தில் இருந்த ரஃபேல் நடால் தற்போது, 6ம் இடத்திற்கு இறங்கியுள்ளார். இவர்கள் இருவரை தவிர முதல் 10 இடங்களில் 8 இடங்களை இளம் வீரர்கள் பிடித்து, அசத்தியுள்ளனர். தொடர்ந்து இந்த ஆண்டும் முதலிடத்தில் நீடிக்கும் செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சுக்கு தற்போது 34 வயது. 6ம் இடத்தில் ரஃபேல் நடாலுக்கு தற்போது 35 வயது. தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள வீரர்களில் மிகவும் இளைய வீரர் என்ற பெருமையை 20 வயதேயான இத்தாலியின் ஜான்னிக் சின்னர் பிடித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ, அப்போது 20வது வயதில் ஏடிபி தரவரிசையில் 10ம் இடத்தை பிடித்தார்.

அந்த சாதனையை தற்போது ஜான்னிக் சின்னர் சமன் செய்துள்ளார். தற்போது 8ம் இடத்தை பிடித்துள்ள நார்வேயின் நம்பிக்கை நட்சத்திரம் காஸ்பர் ரூட், 22வது வயதில் இந்த சாதனையை எட்டியுள்ளார். 4ம் இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசுக்கு தற்போது 23 வயது. தவிர ரஷ்ய வீரர்கள் டேனில் மெட்வடேவ் (2ம் இடம்), ஆண்ட்ரே ரப்லெவ் (5ம் இடம், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (3ம் இடம்), இத்தாலியின் மேட்டியோ பெரட்டினி (7ம் இடம்), போலந்தின் ஹியூபர்ட் ஹர்காஸ் (9ம் இடம்) என அனைவருமே 23 முதல் 25 வயதிற்கு உட்பட்ட வீரர்களே.  இது குறித்து சாதனை வீரர் ரோஜர் பெடரர் கூறுகையில், ‘‘டென்னிசில் அடுத்த தலைமுறைக்கான சிறந்த இளம் வீரர்கள் வந்து விட்டார்கள் என்றே கூற வேண்டும். இளம் வீரர்கள் நன்கு உழைக்கிறார்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : ATP , Tennis ATP rankings; 8 young players in the top 10
× RELATED சில்லி பாயின்ட்…