×

100 நாள் வேலை திட்டத்தில் போலி வருகை பதிவேடு; பிடிஓ விசாரணை

வேலூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த தோலப்பள்ளி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 100நாள் வேலைத்திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வேலை செய்து வருகின்றனர். அதன்படி ஏரி கால்வாய் சீரமைத்தல், கோயில் குளம் தூர் வாருதல், சாலை சீரமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பணிதள பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, தொழிலாளர்களின் வருகை, பணி போன்றவை அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் தொழிலாளர்கள் பணிக்கு வராமலேயே, பணிக்கு வந்ததாக கணக்கு காட்டப்பட்டு மோசடி நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் போலி வருகை பதிவேட்டில் மோசடி செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இந்நிலையில் நேற்று தோலப்பள்ளி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது பணிக்கு வராமலேயே சிலரது பெயரில் பணிக்கு வந்தது போல் கணக்கு காட்டப்படுவதாக ஊராட்சி செயலாளரிடம், தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பிடிஓ சுதாகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதில் பணிக்கு வராமலேயே 46 பேர் பணிக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து பிடிஓ, ஊராட்சி செயலாளரிடம் இனி இதுபோன்று தவறுகள் நடக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.


Tags : Fake attendance record in 100 day work schedule; BDO investigation
× RELATED கன்னியாகுமரி மாவட்டம்...