×

மஞ்சூர் அருகே பரபரப்பு நடுக்காட்டில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்

மஞ்சூர் : மஞ்சூர் அருகே நடுக்காட்டில் அரசு பஸ்சை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன் ஆங்காங்கே சாலைகளில் நின்று அவ்வழியாக சென்று வரும் வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.

நேற்று முன்தினம் கோவையில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் அரசு பஸ் மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இரவு சுமார் 8 மணியளவில் பெரும்பள்ளம் அருகே சென்றபோது எதிரே குட்டியுடன் 4 காட்டு யானைகள் சாலையை மறித்தபடி நடு ரோடடில் நின்று கொண்டிருந்தது. இதை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார். இதேபோல் மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளின் வழி மறிப்பில் சிக்கி ஓரங்கட்டி நிறுத்தப்பட்டன.எதிரே காட்டுயானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக நடந்து சென்று சாலையோரம் இருந்த மண் பாதை வழியாக காட்டுக்குள் இறங்கி சென்றன. இதன்பிறகே பயணிகள் நிம்மதி அடைந்தார்கள். இதைத்தொடர்ந்து அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் வழி மறிப்பால் பயணிகளிடையே பரபரப்பு நிலவியதுடன் சுமார் 1 மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டது.

Tags : Manchur , Machur, Forest Elephants,Government Bus, Nilagiri,Ooty
× RELATED மஞ்சூர் – கோவை சாலையில் அரசு பேருந்து...