இன்று தேசிய ஆற்றல் சேமிப்பு தினம் எரிசக்தியை வீணாக்காமல் ஆற்றல் சக்தியை சேமிப்போம்

சேலம் : எனர்ஜி என்னும் ஆற்றல், மனித வாழ்வில் உணவுக்கு சமமான ஒன்றாகி விட்டது. சமையலுக்கான காஸ் சிலிண்டர், வெப்பத்தை தணிக்கும் மின்விசிறி, வெளிச்சம் தரும் விளக்குகள் என்று அனைத்தும் ஆற்றல் மிக்க எரிபொருட்களால் உருவாக்கப்பட்டு, நமது பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.  நிலக்கரி, பெட்ரோல், அணு, மின்சாரம் ஆகியவை தற்போது முக்கிய எரி பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. இதில் எண்ணெய் வளம் அடுத்த 45 ஆண்டுகளுக்கும், எரிவாயு அடுத்த 65 ஆண்டுகளுக்கும், நிலக்கரி அடுத்த 200 ஆண்டுகளுக்கும் மட்டுமே கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

எனவே நமது வருங்கால சந்ததியினருக்கு எரி பொருள் ஆற்றலை சேமித்து வைக்க வேண்டியது அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமானது. இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 14ம்தேதி (இன்று) உலக ஆற்றல் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாம் எரிசக்தியை உற்பத்தி  செய்யும் வேகத்தை காட்டிலும், அதிகமான வேகத்தில் செலவளிக்கிறோம். உலகளவில் இந்தியாவின் எரிசக்தி ஆதாரம் 1சதவீதம் மட்டுமே உள்ளது.

ஆனால் உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். எனவே நம்மால் இயன்றவரை எரிசக்தியை சேமிப்பது, நாட்டிற்காக பெரும் பணத்தை  சேமிப்பதற்கு சமமானது. உதாரணமாக ஒருவரது காஸ் சிலிண்டர் வழக்கத்தை விட,  ஒருவாரம் அதிகமாக பயன்பட்டாலோ, மின்சாரக் கட்டணம் வழக்கத்தை விட குறைந்தாலோ எவ்வளவு மிச்சமாகிறது என்பதை கணக்கிட்டு பார்த்தால் அருமை தெரியும். காஸ் சிலிண்டர் பயன்பாட்டில் அவ்வப்போது விறகு அடுப்பு, மின்விளக்குகளை ஒளிரச்செய்ய சூரியஒளி மின்சாரம் என்று மாற்று முறையை பயன்படுத்த அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும்.

இதேபோல் ஒவ்வொரு ஆற்றல் சக்திக்கும் மாற்று உள்ளது. இது சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கும் ஒரு தீர்வை தரும் என்பது அறிவியலாளர்களின் கூற்று. ஆற்றல் சக்தி என்பது நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற கொடை. அதை வீணாக்காமல் சேகரித்து நாளைய தலைமுறைக்கு சேர்க்க வேண்டியது நமக்கான கடன். எனவே இந்த நாளில் நாம் அனைவரும் ஆற்றல் சக்தியை சேமிப்பதற்கான உறுதியேற்பதும், எரிசக்தியை வீணாக்காமல் இருப்பதும் காலத்தின் அவசியம் என்கின்றனர் ஆராய்சியாளர்கள்.

Related Stories: