குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் கேசவன் யானையின் உருவ சிலைக்கு 9 வளர்ப்பு யானைகள் அஞ்சலி

பாலக்காடு : குருவாயூர் கோயிலில் கேசவன் யானையின் உருவ சிலைகளுக்கு 9 வளர்ப்பு யானைகள் நேற்று அஞ்சலி செலுத்தின. கேரளாவில் குருவாயூர் கோயிலில் ஏகாதசி திருவிழா இன்று (14ம் தேதி) நடக்கிறது. முன்னதாக 1976 ஏகாதசி விழாவின் முதல்நாள் டிசம்பர் 2ம் தேதி கோவில் தேவஸ்தானத்தின் தலைமை வளர்ப்பு யானையான குருவாயூர் கேசவன் நோய் வயப்பட்டு மரணமடைந்தது.

கேசவன் யானையின் உருவச்சிலை குருவாயூர் தேவஸ்தான அலுவகத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. குருவாயூர் ஏகாதசி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் குருவாயூர் கேசவன் யானையின் உருவச்சிலைக்கு கோயில் வளர்ப்பு யானைகள் நினைவஞ்சலி செலுத்துவது வழக்கமாகும்.

இந்த நிலையில் குருவாயூர் கேசவன் யானையின் நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

கோயில் வளர்ப்பு யானைகளான இந்தரசென் என்ற யானை மீது குருவாயூர் கேசவனின் உருவப்படம் ஏற்றப்பட்டு குருவாயூர் அருகேயுள்ள திருவெங்கடாஜலபதி கோவில் வளாகத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பித்து பார்த்தசாராதி கோவில், கடைவீதி, கிழக்கு கோபுர வாயில் வழியாக குருவாயூர் கேசவனின் உருவப்படத்துடன் 9 வளர்ப்பு யானைகள் வீதியுலா வந்து குருவாயூர் கேசவன் யானை உருவச்சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தின.

ஸ்ரீதரன், விஷ்ணு, கோகுல், செந்தாமராக்‌ஷன், கிருஷ்ணா, கோபிகிருஷ்ணன், ஜூனியர் மாதவன், ராஜாசேகரன் என்ற யானைகளும் வீதியுலாவில் பங்கேற்றன. இதில் தேவஸ்தான சேர்மன் வக்கீல் கே.பி. மோகன்தாஸ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கோவில் நிர்வாகி விநயன், முன்னாள் எம்எல்ஏ பிரசாந்த், உறுப்பினர்கள் அஜித், ஷாஜி ஆகியோர் உடனிருந்தனர். ஊர்வலமாக வந்த யானைகளுக்கு சாத உருண்டை, அவில், சர்க்கரை, கரும்பு, பழவகைகள் ஆகியவை வழங்கப்பட்டன.

குருவாயூர் கோயில் ஏகாதசி திருவிழாவையொட்டி குருவாயூர் கிழக்குக் கோபுர வாயின் முன்பாக அமைந்துள்ள மேல்பத்தூர் கலையரங்கில் செம்மை சங்கீதோற்சவத்தில் மண்ணூர் ராஜாகுமாரன் உன்னி தலைமையில் இசைக்கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தானாலோபனம் 14வது நாளாக நேற்றும் நடைபெற்றது.

Related Stories: