×

தேர்தலை கருத்தில் கொண்டு உ.பி.யில் முடியாத பல திட்டங்களை பாதியிலேயே தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி: மாயாவதி விமர்சனம்

லக்னோ: தேர்தலை கருத்தில் கொண்டு உத்திரப்பிரதேச அரசும், ஒன்றிய அரசும் இணைந்து முடிவடையாத பல திட்டங்களை பாதியிலேயே தொடக்கி வைப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். 5 மாநில தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்திற்கு தேசிய கட்சிகள் படையெடுத்து வருகின்றன. உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முக்கியமான உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த தளத்தை மீட்டெடுக்க காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன.

உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நிலையில், வரும் 18ம் தேதி அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தலைமையில் பாத யாத்திரை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் பிரியங்கா காந்தியும் கலந்துகொள்கிறார். இதனிடையே உத்திரப்பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் மும்முரம் காட்டி வருகிறது. லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் மாயாவதி, தேர்தலை கருத்தில் கொண்டு உத்திரப்பிரதேச அரசும், ஒன்றிய அரசும் இணைந்து முடிவடையாத பல திட்டங்களை பாதியிலேயே தொடக்கி வைப்பதாக விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து மாயாவதி பேசியதாவது, உத்திரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பு வரை சுயநலத்துடன் இருந்த கட்சிகள், தேர்தல் வந்த பின் மக்களுக்காக உழைப்பது போல நடிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக பிற கட்சியினரை சேர்த்துக்கொள்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றார். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் மாயாவதி அறிவித்தார். பஞ்சாபிலும் பாஜக - அமரீந்தர் சிங் கூட்டணி, காங்கிரஸ்- ஆம் ஆத்மீ என பலமுனை போட்டி நிலவுகிறது.

Tags : Narendra Modi ,UP ,Mayawati , UP, Project, Prime Minister Modi, Mayawati
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...