திருவண்ணாமலை மாவட்ட புதிய டிஆர்ஓ பொறுப்பேற்பு-மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி

திருவண்ணாமலை : பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட புதிய டிஆர்ஓ பிரியதர்ஷினி தெரிவித்தார்.திருவண்ணாமலை மாவட்ட டிஆர்ஓவாக பணிபுரிந்த முத்துகுமாரசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்த எம்.பிரியதர்ஷினி திருவண்ணாமலை மாவட்ட டிஆர்ஓவாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட புதிய டிஆர்ஓ எம்.பிரியதர்ஷினி நேற்று பொறுப்பேற்றார். பல் மருத்துவ பட்டம் பெற்ற இவர், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 2013ம் ஆண்டு ராணிப்பேட்டை கோட்டாட்சியராக பணியில் சேர்ந்தார். மேலும், கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, புதிய டிஆர்ஓவாக பொறுப்பேற்ற எம்.பிரிதர்ஷினி தெரிவித்ததாவது: திருவண்ணாமலை விவசாயிகள் நிறைந்த மாவட்டம். இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காகவும் பணியாற்றுவேன். பட்டா மாற்றம், நிவாரண உதவிகள் உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த எந்த கோரிக்கைக்கும் பொதுமக்கள் நேரில் சந்திந்து முறையிடலாம்.

மேலும், பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் அனைத்தும், தகுதியான நபர்களுக்கு சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதோடு, புதிய டிஆர்ஓக்கு வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: