இந்தியாவில் 5 ஆண்டுகளில் 2.07 லட்சம் ஏக்கர் நிலம் வனம்சாரா பணிகளுக்கு மாற்றியது ஏன்?.. டி.ஆர்.பாலு எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

சென்னை: ஐந்து ஆண்டுகளில் இரண்டு லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் நிலம் வனம்சாரா பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி குமார் செளபே பதில் அளித்துள்ளார். திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழு  தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று மக்களவையில், கடந்த  ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் வனநிலம் எவ்வளவு வனம் சாரா பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஒன்றிய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது: ஒன்றிய அரசு வசமுள்ள தகவல்களின்படி மொத்தம் 82,893.61 ஹெக்டர் (2,0,7234  ஏக்கர்) வனநிலம் சென்ற ஐந்து ஆண்டுகளில்,

அதாவது ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2021 வரை, வனப் பாதுகாப்பு சட்டம்,1980ன் கீழ், வனம் சாராத பயன்பாடுகளுக்காகப் பல்வேறு மாநிலங்களில் மடைமாற்றித் தரப்பட்டுள்ளது. பாதுகாப்புத் திட்டங்களுக்கு 10,509. 54 ஹெக்டேர், நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு 16,518.42 ஹெக்டேர், சுரங்கத் திட்டங்களுக்கு 16,312.03 ஹெக்டேர், சாலைகள் அமைக்க 6839.88 ஹெக்டேர், ரயில் பாதை அமைக்க 3280.56 ஹெக்டேர், மின்சாரப் பாதை அமைக்க 3240.78 ஹெக்டேர் வனநிலங்கள் இதில் அடங்கும்.

திமுக எம்பி கதிர் ஆனந்த்: வேலூர் கோட்டையில் உள்ள இந்தியத் தொல்லியல் துறை பூங்கா மைதானத்தை இந்திய தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், பண்டிட் ஜவஹர்லால் நேரு, தமிழகத்தின் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் மற்றும் இந்நாள் தலைவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.‌ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய முடிவுகள் இங்கு எடுக்கப்பட்டுள்ளது.‌ இத்தகைய சிறப்பு மிக்க மைதானத்தை தற்போது பொதுமக்கள் பயன்படுத்த இந்திய தொல்பொருளாய்வுத் துறையினரால் அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் மக்களுடன் சென்று அனுமதி வழங்குமாறும் கூட சமீபத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

அதனால் வேலூர் கோட்டை பூங்கா மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி:   ஜெனிவாவின் ஐபிசிசி அறிக்கைகளின் அடிப்படையில் திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய  இந்திய அரசோ, தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டம், அனல்மின் நிலையம், நிலக்கரி மற்றும் யுரேனிய சுரங்கங்களை திறப்பதில் முனைப்பு காட்டி வருகிறது வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

இன்று இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை, வெள்ளம் நமக்கு பாடம் கற்பித்து இருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் வெள்ளச் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடலோர மாவட்டம், அங்கே வெள்ளத்தினால் விவசாயிகள் மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்ற போது அங்கு மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், கனமழை பெய்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

வெயில் அடித்து மழை பெய்யாவிட்டால் அங்கு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மாநில அரசின் துரிதமான செயல்பாட்டிலும் முதல்வரின் கடுமையான உழைப்பினாலும் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: