×

போர்ஜரி வழக்கில் கைதான யூடியூபர் மாரிதாசுக்கு 27ம்தேதி வரை சிறை: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போர்ஜரி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாசை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 10.7.2020ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் அளித்த புகாரில், போலியான மின்னஞ்சலை உருவாக்கி மோசடி செய்திருப்பதாகவும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கொச்சைப்படுத்தும் வகையிலும் தான்தோன்றித்தனமாக அவதூறான வகையில் யூடியூப் மூலம் மதுரையை சேர்ந்த மாரிதாஸ் என்பவர் பேசி வருகிறார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின்படி யூடியூபர் மாரிதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்தாண்டு வழக்கு பதிவு செய்தனர். அதிமுக ஆட்சி என்பதால் அப்போது மாரிதாஸ் மீது நடவகடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சில கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் யூடியூபர் மாரிதாஸ் பதிவு செய்தார். இதுகுறித்து அளித்த புகாரின்படி மதுரையில் கடந்த 9ம் தேதி மாரிதாசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதைதொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர்களை அவதூறாக பதிவு செய்த வழக்கில் கடந்த சனிக்கிழமை தேனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாரிதாசை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் கைது செய்தனர். பின்னர் மாரிதாசை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர். அதைதொடர்ந்து நேற்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்ட மாரிதாசை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் கோவிந்தராஜ் முன்பு ஆஜர்படுத்தினர்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நடுவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மாரிதாசை புழல் சிறையில் அடைத்தனர். மத்திய குற்றப்பிரிவில் மாரிதாஸ் மீது பல்ேவறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் வரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

Tags : Egmore ,Utopian Maritas , Egmore court upholds Utopian Maritas jailed till 27 for forgery
× RELATED சென்னை எழும்பூர்- நாகர்கோவில்...