திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது பழக்கம்: பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் கல்லூரி மாணவியை கரம் பிடித்தார்

திருப்பூர்: திருப்பூரில் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தோழியை கரம் பிடித்தார்.   திருப்பூர்  காங்கயம் ரோட்டை  சேர்ந்த 21 வயது பெண் அந்தப் பகுதியில் உள்ள பனியன்  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த 21  வயது பெண் கல்லூரியில் படித்துக்கொண்டு பகுதி நேரமாக அந்த நிறுவனத்தில் வேலை  செய்து வந்தார். இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பழகி வந்தனர்.

சமீபத்தில்  இருவரில் ஒருவருக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. இது குறித்து  தோழியிடம் கூறியுள்ளார். இருவரும் தனியார் மருத்துவமனையில் ஆலோசனை  பெற்றனர். அதன்பின், டாக்டர் அறிவுறுத்தலின் பேரில் மாற்றம் ஏற்பட்ட  இளம்பெண் சிகிச்சை எடுத்தார். சிகிச்சைக்குப் பின் பெண் திருநம்பியாக மாறி  தனக்கு ஆண் பெயர் சூட்டி கொண்டார். இந்த நிலையில் அவர் கல்லூரியில் படிக்கும் தோழியை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களது திருமணம் திருவனந்தபுரத்தில் கடந்த 8ம்  தேதி நடந்தது. இதையறிந்த கல்லூரி மாணவியின் பெண்ணின் பெற்றோர்  எதிர்ப்பு தெரிவித்து அவரை மீட்டு வர முயன்றனர்.

இதையடுத்து திருமணம் செய்த இருவரும் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் விசாரித்தனர். இருவரும் மேஜர் என்பதால் இருவரையும் பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் போலீசார்  பெற்றோரிடம் விபரத்தை கூறி அனுப்பி வைத்தனர். ஜோடியை தனியாக அனுப்பினர்.

Related Stories: