இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடித்த ராஜராஜசோழன் காலத்து ஈழக்காசுகள் கண்டெடுப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு பழமையான காசு, பானை ஓடுகளை அடையாளம் காண, கல்வெட்டுகளை படிக்க, படியெடுக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்கால பொருட்கள், காசுகளை விடுமுறை நாட்களில் ஆர்வத்துடன் தேடி கண்டுபிடித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பள்ளி வளாகத்தில் சீனப்பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்தனர். இப்பள்ளி பிளஸ் 2 மாணவி முனீஸ்வரி, முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகளை கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்தார். இதுபற்றி இப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற செயலாளரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு கூறுகையில், ‘‘வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டு வந்தனர்.

போர் மூலம் இலங்கையை, முதலாம் ராஜராஜசோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை, முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செப்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. செப்பாலான ஈழக்காசு, ஈழக்கருங்காசு எனப்படுகிறது. இங்கு கண்டெடுத்த மூன்றும் செப்பாலான ஈழக்கருங்காசுகள்

ஆகும்.இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடித்த இவை சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டு பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது’’ என்றார்.

Related Stories: