மாரிதாசின் டிவிட்டர் பதிவு: பிரிவினைவாதத்தை தூண்டுகிறது: ஐகோர்ட் கிளையில் அரசு வக்கீல் வாதம்

மதுரை: மதுரை திருப்பாலை, அழகர்கோவில் நகரை சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநகர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், மதுரை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது 124ஏ, 153ஏ, 504 505(1)பி 505(2) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது. வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, ‘‘மனுதாரரை டிவிட்டரில் 2 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் ராணுவ தளபதி இறப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார். இது பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய விதமாக உள்ளது. எதன் அடிப்படையில், எந்த ஆதாரத்தில் இவர் இதனை டிவிட் செய்துள்ளார் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அவருடைய கம்ப்யூட்டர், மடிக்கணினி போன்றவைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். பின்னர்தான் இவருடைய பின்புலன் தெரியும்.

மேலும் இவருடைய பல டிவிட் சாதிரீதியான, மதரீதியான மோதலை தூண்டும்விதமாகவும், தமிழக அரசின் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது’’ எனக்கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

மாரிதாஸ் வழக்கறிஞர், ‘‘மனுதாரர் எந்த உள்நோக்கத்துடனும் இதுபோன்று டிவிட் செய்யவில்லை. எனவே இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைக்கு (டிச. 14) ஒத்திவைத்தார்.

Related Stories: